Tuesday, August 06, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -39 (திருக்கயிலாய யாத்திரை-2012)

லாங் சூ சமவெளியில் நடைபயணம்

டோல்மாவில் இருந்து இறங்கிய பின்
லாங் சூ  சமவெளியில் நீண்ட நடை பயணம்


அமீத் அஹர்வால் ஹிமான்சு




மலைகளிலும் சுற்றுப்புறங்களிலும் பனி 
ஆனால் பாதையில் பனி இல்லை


நீண்ட நடைப் பயணம்- மெதுவாக நடந்தோம்


நந்தியெபெருமானின் அற்புத தரிசனம்
(பக்கவாட்டுத் தோற்றம்)



அற்புதமாக நந்தி தரிசனம்


நெடுந்தூரப் பயணம் என்பதால் 
இடையில் சிறிது நேரம் ஓய்வு

நடுநடுவே கூடாரங்கள் ஜாங்ஜர்பூதான் வந்து விட்டதோ? என்று ஒரு சந்தேகம்
 இல்லை இன்னும் சிறிது தூரம்தான் என்று இன்னும் நடை


உறைந்து போன ஒர் அருவி

இன்னும் நடைப் பயணம் தொடர்கின்றது..................




வழியில் மலை சிகரங்களின் பல முகங்கள்




ஜாங்ஜர்பூ கூடாரத்தின் பரிதாப  நிலைமை





டேராப்புக்கில் ஐயனின் வெண் பனி படர்ந்த  வடக்கு  முக அற்புத தரிசனம், டோல்மாவில் அம்மையின் ஆனந்த தரிசனம், கௌரி குளத்தின் அருகாமை தரிசனம் முடித்து சிவசக்தியின் மாப்பெரும் கருணையினால் வெண் பனி படர்ந்திருந்த வழுக்கலான மலையில் இறங்கி,  சிறிது ஆசுவாசபடுத்திக் கொண்டு லாம் சூ சமவெளியில் நடக்க ஆரம்பித்தோம். சுமார் ஒரு கி.மீ தூரம் வரை இரு பக்கமும் பனி இருந்தது பின்னர் பனி உருகி விட்டிருந்தது. இப்பாதையும் இரு வழிப் பாதையாகி விட்டது.  நடுவில் பாயும் பனி ஆறுகள் எல்லாம் உறைந்து கிடந்தது. செல்லும் போது ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கொண்டே எங்களுக்கு எதிராக சென்றது. பின்னர் விசாரித்த போது ஒரு ஜெர்மன் பெண் யாத்திரி கீழே விழுந்து எலும்பை முறித்துக் கொண்டார் அவரை கொண்டு செல்லவே ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது என்று தெரிய வந்தது. மெதுவாக நடு நடுவே சிறிது சிறிதாக சுடு நீர் அருந்திக்கொண்டு, எதையாவது கொறித்துக்கொண்டு மெல்ல மெல்ல முன்னேறினோம். முடிந்த வரை உட்காராமல் மெதுவாக நடப்பதே உத்தமமானது. சென்ற தடவை தரிசிக்காமல் விட்டுப் போன "நந்தி தரிசனம்" இந்தத் தடவை அற்புதமாக கிட்டியது, மிக்க மனமகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு  மெதுவாக நடை போட்டுக் கொண்டே முன்னேறினோம்.

ஒன்றிரண்டு கூடாரங்கள் கண்ணில் பட்டது ஒரு நிமிடம் ஜுடுல்புக்தான் (ஜாங் ஜர்பூ) வந்து விட்டதோ என்று மனதில் ஆனந்தம் தோன்றியது ஆனால் அருகில் புத்த விகாரம் எதுவும் இல்லாததால் அது அல்ல என்று புரிந்தது. சப்ஜே  த்ராக்தோக் (Shabje Drakthok)  என்று நடுவில் உள்ள ஓர் இடத்தில்  டோல்மாவிலிருந்து இறங்கி வருபவர்கள் இளைப்பாறுவதற்காக இந்த கூடாரங்களை அமைத்துள்ளனர்,  பல திபெத்திய போர்ட்டர்கள் இங்கு உணவருந்தினர். எங்கள் போர்ட்டர் சிறுவன் ஒரு பெப்ஸி கேன் வாங்கித் தருமாறு கேட்டான் வாங்கிக் கொடுத்தேன். தன் தோளிலேயே எப்போதும் அணிந்திருக்கும் பையை திறந்து அதில் ஒரு துணியில் சுற்றி வைத்திருந்த எதோ ஒன்றை சிறிது சிறிதாக அறுத்து சாப்பிட்டான்.  அதன் நடுவே ஓடிய எலும்பிலிருந்து அது அநேகமாக செம்மறி ஆட்டுக் கறி என்று யூகித்துக்கொண்டேன் அப்படியே பச்சையாகவே சாப்பிட்டான். அவனுடன்தான் பேச முடியாதே எல்லாம் சைகை பாஷை தான். சிறிது சிரமப்பரிகாரம் செய்து கொண்டு, பின்னர் ஃபிளாஸ்கில் சுடு தண்ணீர் நிரப்பிக் கொண்டு நடைப்பயணத்தை தொடர்ந்தோம். பாதை அனுமார் வால் போல பாதை நீண்டு கொண்டே சென்றது, கால்கள் கெஞ்சின, மூச்சு விடவும் சிரமமானது,  நேரம் செல்ல செல்ல நடப்பது மிகவும் சிரமமாகி விட்டது. ஆனாலும் அந்த முக்கண் முதல்வனின் அருளால், அவன் அளித்த சக்தியால் நடந்து வந்து ஜுடுல்புக் வந்தடைந்தோம். இன்றைய தினம் புறப்பட்ட அனைவரும் சேமமாக வந்து சேர்ந்தோம். இவ்வாறு சிவசக்தியின் அருளினால் சங்கல்பித்துகொண்டு புறபட்ட அனைவரும் வெற்றிகரமாக டோல்மாவை கடந்தோம்.

இங்கு சேர்ப்பாக்கள் வண்டி வழியாக முதலிலேயே அங்கு வந்து தங்கியிருந்தனர். இங்கு அவர்களால் இரு கூடாரங்களை மட்டுமே  தங்குவதற்காக ஏற்பாடு செய்ய முடிந்தது. அதிலும் படுக்கை கீழேதான் இந்த வசதியின்மையைப் பார்த்து  எங்கள் குழுவினரில் பலருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அடியேன் சென்ற தடவை இது போலத்தான் தங்கினேன் என்று கூறினேன், டில்லியில் மண் வீடுகளில் தங்க வைப்பதாக கூறினார்கள் இவ்வாறு ஏமாற்றி விட்டனரே என்று குறைப்பட்டுக்கொண்டனர்.


மலை ஏறி, இறங்கி, நெடுந்தூரம் நடந்த வந்த களைப்பினால் கால் வலித்தது தைலம் தடவிக்கொண்டு இரண்டு கப் சூப் மட்டும் குடித்து விட்டு (வேறு எதுவும் சாப்பிட மனமில்லை) கம்பளிககுள் நுழைந்த மாயம் உறக்கம் வந்து விட்டது, காலையில் எழுந்த போதுதான் மற்றவர்கள் யாக் கட்டியிருந்த கூடாரத்தில் படுக்கைகளைப் போட்டு நம்மை தங்க வைத்து விட்டனர். இரவு முழுவது விசு விசு என்று குளிர் காற்று அடித்துக்கொண்டிருந்தது என்றனர். அடியேனுக்கு ஒன்று தெரியவில்லை. “மாவுக்கேற்ற பணியாரம்”  என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது. நாம் குறைவாக கட்டணம் செலுத்தியதால் இவ்வாறு செய்தார்களோ என்ற ஐயம் இருந்தது. உண்மையை அந்த இறைவனே அறிவார். பல அன்பர்கள் அடியேனிடம் கூறியபடி இவ்வழி செல்லும் போது இந்த சுற்றுலா அமைப்பாளர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது நன்றாக புரிந்தது. எவ்விதத்திலோ இவர்கள் யாத்திரிகளை நிச்சயமாக ஏமாற்றுகின்றனர் என்பது மட்டும் உண்மை.  இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் இந்த யாத்திரையை மேற்கொள்ளும் போது நமக்கு எல்லா வசதிகளும் கிட்டாது,  கிடைக்கின்றதை ஏற்றுக்கொண்டுதான் யாத்திரையை முடிக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செல்வது உத்தமம். ஒன்று மட்டும் நிச்சயம் சீனபகுதியில் தங்கும் வசதிகள் மேம்பட்டிருக்கின்றன இன்னும் மேம்படும் என்பது உண்மை.  இவ்வாறு அந்த அம்மையப்பரின் மாப்பெரும் கருணையினால்  மிகவும் கடினமான இரண்டாம் நாள் கிரி வலமும் நந்தியெம்பெருமானின் தரிசனத்துடன் சிறப்பாக அமைந்தது.