Showing posts with label பனிப் பொழிவு. Show all posts
Showing posts with label பனிப் பொழிவு. Show all posts

Tuesday, April 07, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 19

முதல் நாள் கிரி வலம்  - 4

  பனி மழைக்குப்பின்  வாமதேவ   (வடக்கு) முக தரிசனம் 

பனி மழையின் போது அறையில் இருந்து ஐயனின்  தரிசனம்  


மேகமூட்டம் முழுவதுமாக ஐயனை மறைத்து விட்டது 

திடீரென்று ஆரம்பித்த பனிப்பொழிவின் காரணமாக மெதுவாக நடந்து கொண்டிருந்த யாத்திரிகள் பலர் நனைந்து  விட்டனர். எங்கள் குழுவினரில் மூன்று பேர் பனிப் பொழிவு முடிந்த பின்னரும்  தங்கும் விடுதி  வந்து சேரவில்லை. எங்கள் குழுவினரில் சிலரிடன் செல்பேசி இருந்தது. அதன் மூலம் அவர்களிடம் பேச முடிந்தது.  அவர்களை  பாதுகாப்பாக மீட்பு வண்டி  மீட்டு  அவர்கள்  தங்கும் விடுதியில்  தங்க வைத்திருப்பதாக தகவல் கிட்டியது  கிரிவலப்பாதையில் ஏற்பட்டுள்ள சில முன்னேற்றங்களில்  இதுவும் ஒன்று . ஒரு மீட்பு வண்டியும் ( Rescue  Vehicle)  ஒரு மருத்துவ வண்டியும்  (Ambulance) எப்போதும் ரோந்து வந்து கொண்டிருக்கின்றது. மின்சார வசதியும், செல் போன் கோபுரங்களும்  எல்லாவிடத்திலும் தற்போது உள்ளது. குதிரைக்காரர்கள் அனைஅவ்ரும் தற்போது  செல் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே வருகின்றனர்.  இந்த யாத்திரையின் உயரமான இடமான  டோல்மாவில் இருந்து கூட  செல்போனில் பேசலாம். 



மேகம் சிறிது  விலகிய பின் தரிசனம் 



நந்தியெம்பெருமான் போல் தோற்றமளிக்கும் மலைப்பகுதி 


மாறாத ஒன்றே ஒன்று  கழிவறைகள்தான்.  .  முதலில் கழிவறைகளே கிடையாது ஆனால் தற்போது  கழிவறைகள் ஆங்காங்கு கட்டியுள்ளனர் ஆனால் இன்னமும் அவர்கள் பாணியில்தான்  உள்ளது. இந்த கழிவறைகளை விட திறந்த வெளியே மேல். 






ஐயனின் சில அருகாமை காட்சிகள்


பொதுவாகவே  இந்தியாவில் இருந்து  இயங்கும் இந்த தனியார் சுற்றுலா நிறுவனத்தினர் தாமாக யாத்திரிகளை  சீனப்பகுதிக்கு அழைத்து செல்வதில்லை. அவர்கள் நேபாளத்தில் உள்ள ஏதாவது சுற்றுலா நிறுவனத்தாருடன் கூட்டு வைத்துக் கொள்கின்றனர். இவர்கள் செய்வது எல்லாம் நம்மிடம் பணத்தை வாங்கி அவர்களிடம் கொடுப்பது மட்டும்தான். எல்லா முடிவுகளும்   அந்த சுற்றுலா நிறுவனத்தினரின் சேர்ப்பாக்கள் எடுப்பதுதான்  இவர்களுக்கு அவர்களிடன் எந்தவித சம்பந்தமும் இருப்பதில்லை என்பதால் யாத்திரிகளுக்கு சீனப்பகுதியில் பல வித துன்பங்கள் ஏற்படுகின்றது. 2012  டில்லியை  சார்ந்த சிரேஷ்டா நிறுவனத்தின் மூலம் திருக்கயிலாய  சென்றபோதும் அடியேனுக்கு இந்த உண்மை புரிந்தது. அவர்கள் ஏற்பாடு செய்த தங்குமிடம் மிகவும் மோசமாக இருந்தது. ஜாங் ஜெர்பூவில் எங்களை யாக் கட்டும் கூடாரத்தில் தங்க வைத்தனர். அதில் ஒரு பெண்மணிக்கு எதோ பூச்சி கடித்து உடல் முழுவதும் தடிப்பாகி ஒரு வருடம் சிகிச்சையெடுத்து கொண்டாராம். 


அதே போல ஒரு அனுபவம் எங்களை  இந்த வருடம்  அழைத்து சென்றவர்களுடனும் ஏற்பட்டது. சேர்ப்பாக்கள் அனைவரும் அறை அறையாக சென்று பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதல் டோல்மாவில் நிலைமை மோசமாக இருக்கும்  ஆகவே இனி கிரிவலத்தை தொடரவேண்டாம் இப்படியே திரும்பிவிடுங்கள் என்று அறிவுறுத்தினர். அடியோங்களில் ஒரு சிலர் மட்டும் இல்லை கிரி வலம் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்கு அவர்கள்  நாங்கள் யாரும் உங்களுடன் வர மாட்டோம் தாங்கள் மட்டும் செல்லலாம் என்று முதலில் கூறினார்கள், பரவாயில்லை அந்த திருக்கயிலை நாதர் எங்களை கவனித்துக் கொள்வார் தாங்கள் வரவேண்டியதில்லை என்று கூறினோம், இது குதிரை ஆண்டு இந்த வருடம் கிரிவலம் முடித்தால் பன்னிரண்டு ஆண்டுகள் கிரி வலம் செய்த பலன் உண்டு எனவேதான் இவ்வருடம் திருக்கயிலாய யாத்திரை வந்தோம் என்ற பிறகு சிறிது இறங்கி வந்தார்கள்.  பின்னர்  ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு தாங்கள் தான் பொறுப்பு எங்களுக்கு ஒன்றும் தெரியாது எந்த வழியிலும் நாங்கள் உதவ மாட்டோம்  என்று கூறினார்கள். வெகு நேரம் விவாதம் நடந்தது.  நிறைவாக இரவிலோ அல்லது அதிகாலையிலோ பனி பெய்தால் செல்ல வேண்டாம் இல்லாவிட்டால் செல்லுவோம் எனவே காலையில் ஒரு முடிவு எடுப்போம் என்றபின் அவர்கள் சென்றனர். திரு. குமாரசாமி அவர்கள் இரவு முழுவதும் ஜன்னல் மூலமாக ஐயனை தரிசித்துக்கொண்டிருந்தாராம் இரவு மூன்றுமணியளவில் ஐயனின் முழு தரிசனம் கிட்டீயது என்று கூறினார்.   

டேராபுக் புத்த விகாரம் ஆற்றின் அப்பக்கம் உள்ளது

அதிகாலையிலும் நாடகம் தொடர்ந்தது.  கிரிவலம் செல்ல வேண்டாம் என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். ஒரு அன்பர் மிகவும் கோபமாக என்னுடைய மனைவியின் நகைகளை அடமானம் வைத்து இந்த யாத்திரை வந்திருக்கின்றேன், இனி ஒரு வாய்ப்பு எனல்க்கு இல்லை எனக்கு ஏதாவது ஏற்பட்டால் அப்படியே இழுத்து தள்ளிவிட்டு சென்று விடுங்கள், எங்கள் வீட்டில் சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கின்றேன் என்று கூறிய பிறகுதான்  விரும்பியவர்கள் செல்லுங்கள் என்று கூறினார்கள்.  50 பேரில் ஏழு பேர் மட்டுமே "நாமார்க்கும் குடியல்லாம் நமனை அஞ்சோம்" என்று அந்த சிவபெருமானை வணங்கி வழிபட்டு கிரி வலத்தை தொடர்ந்தோம்.  

யாத்திரை செல்கின்ற அனைவருக்கும் கிரிவலம் வாய்க்காது பல சமயம் சீன அரசே அதை தடை செய்து விடுகின்றது. மேலும் டோல்மாவில் எப்படி வானிலை இருக்கும் என்று சொல்லமுடியாது. ஆகவே நாம் நினைப்பது அங்கே நடக்காது எல்லாம் அவன் செயல்தான்.  

மிகவும் வருத்தமான விஷயம் ஒன்றே ஒன்றுதான். யாத்திரை முடித்து திரும்பி வந்து அவர்கள் இப்படி செய்கின்றார்களே நீங்கள் ஒன்றும் சொல்வதில்லையா?  என்று சுற்றுலா நிறுவனத்தரிடம் கேட்டபோது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை உங்களிடம் பணம் வாங்கி அவர்களுக்கு தருவதுதான் எங்கள் பொருப்பு சீனப்பகுதியில் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்று விட்டேத்தியாக பதில் கூறினார்கள்.  அதுவே முன்பணம் வாங்கும் போது கிரிவலம் கட்டாயம் கூட்டிச் செல்வோம் என்று கூறினார்கள். ஒவ்வொரு சுற்றுலா நிறுவனத்தினரும் ஏதோ  ஒரு வகையில் ஏமாற்றத்தான் செய்கின்றனர். ஆகவே அந்த திருக்கயிலை மலையானை மட்டுமே நம்பிச்செல்ல வேண்டும். 

அந்த மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் அருளால் அந்த ஏழு பேர் கிரிவலத்தை முடிக்க முடிந்ததா இல்லையா? என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.   



வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு
தனை சிறிதும் நினையாதே தளர்வு எய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டுஎன் பிறப்பு அறுத்த அணையிலியை
அனைத்துஉலகும் தொழும்  கயிலை  (தில்லை அம்பலத்தே)   கண்டேனே!

                                                                                                                            யாத்திரை தொடரும் . . . . . . 

Saturday, June 22, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -33 (திருக்கயிலாய யாத்திரை-2012)

முதல் நாள் கிரிவலம் -2

மேற்கு முக தரிசனம்- பனிபொழிவில் கிரிவலம் 

ஐயனின் சத்யோஜாத முக (மேற்கு) தரிசனம்

இவ்வருடம் கிட்டிய தரிசனம்

மேலே செல்ல செல்ல .........
(யக்யாங் பாண்டே)

மலைகள் எல்லாம் வெள்ளி கவசம் பூண்டிருந்தன
(அடியேன், நிஷா பாண்டே ......)

கால்கள் கெஞ்சுகின்றன......
( மற்றும் அமீத்  அஹர்வால்,  சுஜாய் ஹஜ்ரா)

மஞ்சு தோயும் குடுமிகள் - பனி படர்ந்த மலை சிகரங்கள்

மலையுச்சியில் மட்டுமா பனி????

தரையெங்கும் மஞ்சு படர்ந்திருந்தது

இவ்வாறு சென்று கொண்டிருந்தபோது....

பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டது

பனிப்பொழிவிலேயே நடந்து இரண்டாம் வணங்கிடத்தை அடைந்தோம்

 கீழே உள்ள வரை படத்தில் Second Prostration point,  Kailash view, Rock associated with  Mahakhal  என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம்.  மேற்கு முக தரிசனம் முழுதுமாக கிட்டவில்லை, மேகங்கள் சூழ்ந்து கொண்டன, நடுவில் உள்ள வளையங்கள்  பனியால் நிறைந்து  மலை மகளின் திருக்கர வளையல்கள் போல தரிசனம் தந்தன, மற்றும்  நந்தி தரிசனம் மட்டும் ஸ்பஷ்டமாக கிட்டியது. அருகில் இருந்த கூடாரத்தில் தேநீர் அருந்தி, சுடு தண்ணீர் நிரப்பிகொண்டு பனிப்பொழிவு நின்றபின் கிரி வலத்தை தொடர்ந்தோம்

 திருக்கயிலாய கிரிவலப்பாதை வரை படம்

மேற்கு முகத்தின் கீழ்ப்பகுதி


கிரிவலப் பாதையெங்கும் பனி நிறைந்து விட்டது 
(பங்கஜ் குப்தா)


பனியிலேயே நடந்தோம்
(விஜய் குமார், ரஷ்மி மஹாஜன் தம்பதியினர்)

ஸ்பஷ்டமான மேற்கு முக நந்தி தரிசனம்

முதல் நாள் கிரி வலத்தின் போது நாம் ஐயனின் நான்கு முகங்களையும் தரிசனம் செய்கின்றோம். டார்ச்சனில் கிளம்பும் போது தெற்கு முகத்தின் திருமுடியையும், கிழக்கு முகத்தையும் தரிசனம் செய்கின்றோம், பின்னர் யம துவாரத்தில் இருந்து கணேசர், நந்தி, ஐயனின் முழு தெற்கு முகத்தையும் தரிசனம் செய்கின்றோம்.  பின்னர் கிரி வலம் செய்யும் போது மேற்கு முகத்தையும், பின்னர் மேற்கு மற்றும் வடக்கு இரண்டு முகங்களையும் இனைத்து தரிசனம் செய்கின்றோம். முதல் நாள் வடக்கு முகத்தின் திருவடியில் தங்குகின்றோம். 

இரண்டாம் நாள் காலை வடக்கு முகம் மற்றும் கிழக்கு முகத்தின் ஒரு பகுதி மற்றும் அதன் நீட்சி மற்றும் டோல்மா கணவாயில் பார்வதி தேவி மற்றும்   அன்னை மலைமகள் கௌரி புனலாடிய கௌரி குளம் மற்றும் நந்தியெம்பெருமானின் ஒரு பகுதியை தரிசனம் செய்கின்றோம். 

மீண்டும் மூன்றாம் நாள் தெற்கு முகத்தின் முழு தரிசனம் மற்றும் கிழக்கு முகத்தின் நீட்சியையும் தரிசனம் செய்யலாம். அஷ்டபத் சென்றால் ஐயனின் தெற்கு முகத்தின் முழு தரிசனத்தையும் நந்தியெம்பெருமானையும் தரிசனம் செய்யலாம்.


மேற்கு முகம் மற்றும் வடக்கு முக தரிசனம் 

 முதல் தனி வடக்கு முக தரிசனம்





திருக்கயிலாய காப்பு மலை காட்டும் பல்வேறு முகங்களை பார்த்துக்கொண்டே  லா சூ சமவெளியில் மனதில் ஐந்தெழுத்தை ஜபித்துக்கொண்டே மெல்ல மெல்ல மலையேறினோம். சில அன்பர்கள் தேவார திருவாசகம் ஓதிக் கொண்டே எங்களை கடந்து சென்றனர். பாண்டியனாய் வந்து தமிழ் வளர்த்த தென் பாண்டி நாட்டானின் திருமுன் சுந்தரத் தமிழ் பதிகம் கேட்டது காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. இன்றைய தின ஏற்றம் அவ்வளவு செங்குத்தானது அல்ல என்பதால் மிகவும் சிரமம் இருக்கவில்லை. இரு பக்கமும் மலைகள்| முழுவதும் வெள்ளிப் போர்வை போர்த்திக்கொண்டது போல பனியால் மூடப்பட்டிருந்தன. சிறிது தூரம் சென்ற பிறது பாதையின் இரு புறமும் பனி படர்ந்திருந்ததைப் பார்த்தோம்  இனியும் மலை உச்சிகளில் பனி முழுவதுமாக உருகவில்லை மற்றும் பனிப்பொழிவும் தொடர்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியது.

இவ்வாறு சுமார் ஒரு மணி நேரம் சென்றிருப்போம் திடீரென்று கரங்களில் ஒரு திடீர் சிலிர்ப்பு என்ன என்று பார்த்தால் ஒரு பனித் துளி. பார்த்தால்  பனிப் பொழிவு ஆரம்பித்து விட்டது. முதலில் சிறு துகள்களாக இருந்தது போகப் போக பெரிதாக விழுந்தது. உடனே அனைவரும் மழைக் கோட், கையுறையை  எடுத்து மாட்டிக் கொண்டோம். இந்த இடத்தில் எங்கும் ஓடி ஒளியவும் முடியாதே அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, மாணிக்க வாசகர் பாடியபடி உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அவர் பதமலர் பணிந்து முன்னேறினோம். தானே அழைத்து தரிசனம் அளித்த அந்த தயாபரனின்  கருணையினால் காற்றின் திசை எங்களுக்கு பின் புறமாக இருந்ததால் அதிக சிரமம் இருக்கவில்லை. முகத்தில் பனி விழுந்திருந்தால் நடைப்பயணம் மிகவும் கடினமாகியிருக்கும். அந்த பனி மழையில் அவன் திருப்புகழ் பாடிக்கொண்டே நடந்தோம். மழைக் கோட்டில் பனி படிவதால் எடை அதிகமாகி விடும், எனவே படியும் பனியை பத்து நிமிடத்திற்கு ஒரு முறை உதறி விட்டுக்கொண்டே மெல்ல மெல்ல முன்னேறினோம். கையில் கம்பளி உறை அணிந்திருந்த போதும் எப்போதாவது ஒரு சிறு பனித் துளி அதன் மேல் விழுந்தால் கூட உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு அதிர்வு ஏற்பட்டது. கையுறை இருந்தும் கூட இவ்வாறு இருந்தது கையுறை இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் சிரமமாக போயிருக்கும். கையுறைகளின் முக்கியத்துவம் விளங்கியது. இந்த உயர்மட்டத்தில் எப்போது சீதோஷ்ணம் மாறும் என்பது சொல்ல முடியாது.

இப்பகுதியில் பெய்கின்ற மழையே இந்தப் பனிப்பொழிவு. வெப்பம் மிகவும் குறைவு என்பதால் அது பனியாக மாறிப் பொழிகின்றது. சிறிது நேரம் சென்ற பின் பாதையில் பல  அன்பர்கள் பனியில் நடந்து செல்வதால் ஈரமாகி விட்டது ஒவ்வொரு அடியாக பார்த்து வைத்துத்தான் செல்ல வேண்டி வந்தது. ஈர்த்தென்னை ஆட்கொண்ட பெருமானே உன்னை நம்பித்தான் வந்தோம் எங்களை கரையேற்றுவது உன் பொறுப்பு என்று அவரிடமே சரணமடைந்து விட்டு எந்த கவலையும் இல்லாமல் ஒவ்வொரு அடிக்கும் சிவாயநம கூறிக்கொண்டே மெதுவாக  கைத்தடியின் துணையுடன் ஊர்ந்தோம்.

இவ்வாறு நடந்து கொண்டிருந்த போது நடுவில் சில கூடாரங்கள் கண்ணில் பட்டன.  இரண்டாம் வணங்கிடம் (Second Prostration Point) அதாவது சத்யோஜாத  முகம்  என்னும் மேற்கு முகத்தை அடைந்து விட்டோம் என்பது புரிந்தது. ஐயனை முதலில் தரிசனம் செய்தோம் மேக மூட்டம் மேலும் பனியால் நிறைந்திருந்ததால் கீழ்ப்பகுதி தரிசனம் மட்டுமே கிட்டியது. அதுவும் நடுவில் உள்ள வளையங்கள் எல்லாம் பனியால் நிறைந்து அம்மை சிவகாம சுந்தரியின் திருகரங்களில் உள்ள வளையல்கள் போல தோற்றமளித்தது. மாணிக்க வாசகரின்  "பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய் வளை தன் பாதத் திறம் பாடி ஆடேலோர் எம்பாவாய்" என்னும் திருவெம்பாவை பதிகம்பாடி சிவசக்தியை வணங்கினோம். ஐயனை கொண்டல்கள் கூடி மறைத்துக் கொண்டிருக்க, மேகங்களின் வெள்ளிப் பின்னணியில் கருப்பு நிற நந்தியெம்பெருமானை அற்புதமாக தரிசனம் செய்து சிவனாரை என்றைக்கும் சுமக்கும்  நந்தி தேவரை ஞான முதல்வனை வணங்கினோம்.

பின்னர் கூடாரத்திற்குள் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு தேநீர் அருந்தி விட்டு பிளாஸ்க்கில் சுடு தண்ணீர் நிரப்பிக்கொண்டு(ஒரு flaskகிற்கு ஒரு யுவான்) பனிப்பொழிவு சிறிது மட்டுப்படுவதற்காக காத்திருந்தோம். இங்கேயும் கவனித்தோம் புது மண் வீடுகள் மற்றும் இவர்கள் பாணி கழிவறைகள் அமைத்துள்ளனர். கூடாரங்கள் எல்லாம் நிறைந்து வழிந்தது. ஐயனின் கருணையினால் பனிப்பொழிவு சிறிது நேரத்தில்  நின்றது. உடனே வெளியே வந்து கிரி வலத்தை மறுபடியும் துவக்கினோம். 

நாம் பனியையே பார்த்ததில்லை, ஆயினும் இன்றைய தினம் மழை பெய்வது போல பனிப்பொழிவில் கிரி வலம் செய்யும் போது ஐயனை தரிசனம் செய்யும் அற்புத அனுபவம் அவனருளால் கிட்டியது. இனி டேராபுக் சென்ற பின் வடக்கு முக தரிசனம் எவ்வாறு கிட்டியது என்பதைக் காண கட்டாயம் தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.