முதல் நாள் கிரிவலம் -2
மேற்கு முக தரிசனம்- பனிபொழிவில் கிரிவலம்
ஐயனின் சத்யோஜாத முக (மேற்கு) தரிசனம்
இவ்வருடம் கிட்டிய தரிசனம்
மேலே செல்ல செல்ல .........
(யக்யாங் பாண்டே)
மலைகள் எல்லாம் வெள்ளி கவசம் பூண்டிருந்தன
(அடியேன், நிஷா பாண்டே ......)
கால்கள் கெஞ்சுகின்றன......
( மற்றும் அமீத் அஹர்வால், சுஜாய் ஹஜ்ரா)
மஞ்சு தோயும் குடுமிகள் - பனி படர்ந்த மலை சிகரங்கள்
மலையுச்சியில் மட்டுமா பனி????
தரையெங்கும் மஞ்சு படர்ந்திருந்தது
இவ்வாறு சென்று கொண்டிருந்தபோது....
பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டது
பனிப்பொழிவிலேயே நடந்து இரண்டாம் வணங்கிடத்தை அடைந்தோம்
கீழே உள்ள வரை படத்தில் Second Prostration point, Kailash view, Rock associated with Mahakhal என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம். மேற்கு முக தரிசனம் முழுதுமாக கிட்டவில்லை, மேகங்கள் சூழ்ந்து கொண்டன, நடுவில் உள்ள வளையங்கள் பனியால் நிறைந்து மலை மகளின் திருக்கர வளையல்கள் போல தரிசனம் தந்தன, மற்றும் நந்தி தரிசனம் மட்டும் ஸ்பஷ்டமாக கிட்டியது. அருகில் இருந்த கூடாரத்தில் தேநீர் அருந்தி, சுடு தண்ணீர் நிரப்பிகொண்டு பனிப்பொழிவு நின்றபின் கிரி வலத்தை தொடர்ந்தோம்
திருக்கயிலாய கிரிவலப்பாதை வரை படம்
மேற்கு முகத்தின் கீழ்ப்பகுதி
கிரிவலப் பாதையெங்கும் பனி நிறைந்து விட்டது
(பங்கஜ் குப்தா)
பனியிலேயே நடந்தோம்
(விஜய் குமார், ரஷ்மி மஹாஜன் தம்பதியினர்)
ஸ்பஷ்டமான மேற்கு முக நந்தி தரிசனம்
முதல் நாள் கிரி வலத்தின் போது நாம் ஐயனின் நான்கு முகங்களையும் தரிசனம் செய்கின்றோம். டார்ச்சனில் கிளம்பும் போது தெற்கு முகத்தின் திருமுடியையும், கிழக்கு முகத்தையும் தரிசனம் செய்கின்றோம், பின்னர் யம துவாரத்தில் இருந்து கணேசர், நந்தி, ஐயனின் முழு தெற்கு முகத்தையும் தரிசனம் செய்கின்றோம். பின்னர் கிரி வலம் செய்யும் போது மேற்கு முகத்தையும், பின்னர் மேற்கு மற்றும் வடக்கு இரண்டு முகங்களையும் இனைத்து தரிசனம் செய்கின்றோம். முதல் நாள் வடக்கு முகத்தின் திருவடியில் தங்குகின்றோம்.
இரண்டாம் நாள் காலை வடக்கு முகம் மற்றும் கிழக்கு முகத்தின் ஒரு பகுதி மற்றும் அதன் நீட்சி மற்றும் டோல்மா கணவாயில் பார்வதி தேவி மற்றும் அன்னை மலைமகள் கௌரி புனலாடிய கௌரி குளம் மற்றும் நந்தியெம்பெருமானின் ஒரு பகுதியை தரிசனம் செய்கின்றோம்.
மீண்டும் மூன்றாம் நாள் தெற்கு முகத்தின் முழு தரிசனம் மற்றும் கிழக்கு முகத்தின் நீட்சியையும் தரிசனம் செய்யலாம். அஷ்டபத் சென்றால் ஐயனின் தெற்கு முகத்தின் முழு தரிசனத்தையும் நந்தியெம்பெருமானையும் தரிசனம் செய்யலாம்.
மேற்கு முகம் மற்றும் வடக்கு முக தரிசனம்
முதல் தனி வடக்கு முக தரிசனம்
திருக்கயிலாய
காப்பு மலை காட்டும் பல்வேறு முகங்களை பார்த்துக்கொண்டே லா சூ சமவெளியில் மனதில் ஐந்தெழுத்தை
ஜபித்துக்கொண்டே மெல்ல மெல்ல மலையேறினோம். சில அன்பர்கள் தேவார திருவாசகம்
ஓதிக் கொண்டே எங்களை கடந்து சென்றனர்.
பாண்டியனாய் வந்து தமிழ் வளர்த்த தென் பாண்டி நாட்டானின் திருமுன் சுந்தரத் தமிழ்
பதிகம் கேட்டது காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. இன்றைய தின
ஏற்றம் அவ்வளவு செங்குத்தானது அல்ல என்பதால் மிகவும் சிரமம் இருக்கவில்லை. இரு
பக்கமும் மலைகள்| முழுவதும் வெள்ளிப் போர்வை போர்த்திக்கொண்டது போல பனியால்
மூடப்பட்டிருந்தன. சிறிது தூரம் சென்ற பிறது பாதையின் இரு புறமும் பனி
படர்ந்திருந்ததைப் பார்த்தோம் இனியும்
மலை உச்சிகளில் பனி முழுவதுமாக உருகவில்லை மற்றும் பனிப்பொழிவும் தொடர்கிறது
என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியது.
இவ்வாறு
சுமார் ஒரு மணி நேரம் சென்றிருப்போம் திடீரென்று கரங்களில் ஒரு திடீர் சிலிர்ப்பு
என்ன என்று பார்த்தால் ஒரு பனித் துளி. பார்த்தால் பனிப் பொழிவு ஆரம்பித்து விட்டது. முதலில் சிறு
துகள்களாக இருந்தது போகப் போக பெரிதாக விழுந்தது. உடனே அனைவரும் மழைக் கோட், கையுறையை எடுத்து மாட்டிக் கொண்டோம். இந்த இடத்தில்
எங்கும் ஓடி ஒளியவும் முடியாதே அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, மாணிக்க வாசகர்
பாடியபடி உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அவர் பதமலர் பணிந்து
முன்னேறினோம். தானே அழைத்து தரிசனம் அளித்த அந்த தயாபரனின் கருணையினால் காற்றின் திசை எங்களுக்கு பின்
புறமாக இருந்ததால் அதிக சிரமம் இருக்கவில்லை. முகத்தில் பனி விழுந்திருந்தால்
நடைப்பயணம் மிகவும் கடினமாகியிருக்கும். அந்த பனி மழையில் அவன் திருப்புகழ் பாடிக்கொண்டே நடந்தோம். மழைக் கோட்டில் பனி படிவதால் எடை அதிகமாகி
விடும், எனவே படியும் பனியை பத்து
நிமிடத்திற்கு ஒரு முறை உதறி விட்டுக்கொண்டே மெல்ல மெல்ல முன்னேறினோம். கையில்
கம்பளி உறை அணிந்திருந்த போதும் எப்போதாவது ஒரு சிறு பனித் துளி அதன் மேல்
விழுந்தால் கூட உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு அதிர்வு ஏற்பட்டது.
கையுறை இருந்தும் கூட இவ்வாறு இருந்தது கையுறை இல்லாமல் இருந்திருந்தால் மிகவும்
சிரமமாக போயிருக்கும். கையுறைகளின் முக்கியத்துவம்
விளங்கியது. இந்த உயர்மட்டத்தில் எப்போது சீதோஷ்ணம் மாறும் என்பது சொல்ல முடியாது.
இப்பகுதியில் பெய்கின்ற மழையே இந்தப்
பனிப்பொழிவு. வெப்பம் மிகவும் குறைவு என்பதால் அது பனியாக மாறிப் பொழிகின்றது.
சிறிது நேரம் சென்ற பின் பாதையில் பல
அன்பர்கள் பனியில் நடந்து செல்வதால் ஈரமாகி விட்டது ஒவ்வொரு அடியாக
பார்த்து வைத்துத்தான் செல்ல வேண்டி வந்தது. ஈர்த்தென்னை ஆட்கொண்ட பெருமானே உன்னை நம்பித்தான் வந்தோம் எங்களை
கரையேற்றுவது உன் பொறுப்பு என்று அவரிடமே சரணமடைந்து விட்டு எந்த கவலையும்
இல்லாமல் ஒவ்வொரு அடிக்கும் சிவாயநம கூறிக்கொண்டே மெதுவாக கைத்தடியின் துணையுடன் ஊர்ந்தோம்.
இவ்வாறு நடந்து கொண்டிருந்த போது நடுவில் சில
கூடாரங்கள் கண்ணில் பட்டன. இரண்டாம்
வணங்கிடம் (Second Prostration Point) அதாவது சத்யோஜாத முகம் என்னும் மேற்கு முகத்தை அடைந்து விட்டோம் என்பது புரிந்தது. ஐயனை முதலில்
தரிசனம் செய்தோம் மேக மூட்டம் மேலும் பனியால் நிறைந்திருந்ததால் கீழ்ப்பகுதி தரிசனம் மட்டுமே கிட்டியது. அதுவும் நடுவில் உள்ள வளையங்கள் எல்லாம் பனியால் நிறைந்து அம்மை
சிவகாம சுந்தரியின் திருகரங்களில் உள்ள வளையல்கள் போல தோற்றமளித்தது. மாணிக்க
வாசகரின் "பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய் வளை தன் பாதத் திறம் பாடி ஆடேலோர்
எம்பாவாய்" என்னும் திருவெம்பாவை பதிகம்பாடி சிவசக்தியை வணங்கினோம். ஐயனை
கொண்டல்கள் கூடி மறைத்துக் கொண்டிருக்க, மேகங்களின் வெள்ளிப் பின்னணியில் கருப்பு
நிற நந்தியெம்பெருமானை அற்புதமாக தரிசனம் செய்து சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
தேவரை ஞான முதல்வனை வணங்கினோம்.
பின்னர்
கூடாரத்திற்குள் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு தேநீர் அருந்தி விட்டு
பிளாஸ்க்கில் சுடு தண்ணீர் நிரப்பிக்கொண்டு(ஒரு flaskகிற்கு ஒரு யுவான்)
பனிப்பொழிவு சிறிது மட்டுப்படுவதற்காக காத்திருந்தோம். இங்கேயும் கவனித்தோம் புது மண் வீடுகள்
மற்றும் இவர்கள் பாணி கழிவறைகள்
அமைத்துள்ளனர். கூடாரங்கள் எல்லாம் நிறைந்து வழிந்தது. ஐயனின் கருணையினால்
பனிப்பொழிவு சிறிது நேரத்தில் நின்றது.
உடனே வெளியே வந்து கிரி வலத்தை மறுபடியும் துவக்கினோம்.
நாம் பனியையே பார்த்ததில்லை, ஆயினும் இன்றைய தினம் மழை பெய்வது போல பனிப்பொழிவில் கிரி வலம் செய்யும் போது ஐயனை தரிசனம் செய்யும் அற்புத அனுபவம் அவனருளால் கிட்டியது. இனி டேராபுக் சென்ற பின் வடக்கு முக தரிசனம் எவ்வாறு கிட்டியது என்பதைக் காண கட்டாயம் தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.
2 comments:
Thanks................................
மிக்க நன்றி தனபாலன், தொடரின் நிறைவை நெருங்குகிறோம். இன்னும் 4, 5 பதிவுகள் உள்ளன தொடர்ந்து வாருங்கள்.
Post a Comment