Tuesday, April 07, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 20

இரண்டாம்  நாள் கிரி வலம்  - 1

 டோல்மாவில்   மலையரையன் பொற்பாவை   தரிசனம்  

அதிகாலையில் டேராபுக்

காலை எழுந்தவுடன் டேராபுக் முகாம் இவ்வாறுதான்  காட்சியளித்தது. வெள்ளியை உருக்கி ஊற்றியது போல தரை முழுவதும் பால் வெள்ளை நிறமாக காட்சியளித்தது.  காலையிலேயே திபெத்தியர்களும். சீனர்களும் எறும்புகள் போல ஒருவர் பின் ஒருவராக   சுறு சுறுப்பாக மலை ஏறிக்கொண்டிருந்தனர். 

முதல் நாள் பார்த்த அதே பைரவரின் வாகனம் இன்றும் பல்வேறு இடங்களில் கண்ணில் பட்டது சில சமயம் அருகில் நடந்து வரும் பின்னர் கண்ணில் படாமல் ஒடி விடும். டோல்மாவிலும் கண்ணில் பட்டது.  
  

மலைகள் எல்லாம் வெள்ளிக் கவசம் பூண்டிருந்தன

ஐயனை இன்னும் மேகங்கள் மூடிக்கொண்டுதான் இருந்தன.  ஐயனையும் அன்னை பார்வதியையும் மனதார வணங்கிவிட்டு இரண்டாம் நாள் கிரி வலத்தைத் துவங்கினோம். குதிரைக்காரர்களும் முதலில் முரண்டு பிடித்தனர். எப்படியும் இவர்கள் கிரி வலம் செல்வதில் இருந்து விலகப்போகவதில்லை என்பதை உணர்ந்த பின் அவர்களும் ஒன்றும் சொல்லாமல்  புறப்பட்டு விட்டனர். முதலில் இவர்களுடன் சைகையில் தான் பேசவேண்டும், தற்போது இவர்களும் ஹிந்தியில் முக்கியமான சொற்களை கற்றுக்கொண்டிருக்கிறார்கள் எனவே  தற்போது இவர்கள் நாம் சொல்வதை புரிந்து கொண்டு  நமக்கு வேண்டிய உதவிகளை செய்கின்றனர்.   

மஞ்சுஸ்ரீ மலையின் பக்னா ரீ மலைச்சிகரம்


வஜ்ரபாணி மஞ்சுஸ்ரீ மலைகளுக்கிடையில் கிழக்கு முகத்தின் நீட்சி

ஒருவர் பின் ஒருவராக மலையேற்றம் 


நடுவில் சிறிது நேரம் ஓய்வு

சீன குதிரை வருடம் என்பதால் உள்ளூர்க்காரர்கள் கூட்டம் அதிகமாக  இருந்தது. இவர்கள் வெட்டவெளியில் அப்படியே தூங்கி அதிகாலையிலேயே கிரி வலத்தை மேற்கொண்டதால் பலர் நடந்து சென்றதால் பாதையில் பனி இருக்கவில்லை. ஆனால் சுற்றிலும் முதல்நாள் பெய்த பனி நிறைந்திருந்தது.    வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகள், பச்சை குழந்தைகளை மார்பிலும் தோளிலும் ஏந்திய பெண்கள்,  ஏன் கர்ப்பிணிகள் கூட கிரி வலம் வந்து கொண்டிருந்தனர். குதிரை வருடம் என்பதால் கர்ப்பத்தில் உள்ள  குழந்தைக்குக் கூட பன்னிரண்டு  முறை கிரி வலம் செய்த புண்ணியம்   கிடைக்கும் என்பது திபெத்தியர்களின் நம்பிக்கை. கிரி வலத்தின் போது அல்லது  திருக்கயிலாயத்தின் அருகாமையில் குழந்தை பிறந்தால் இறையருள் பெற்ற குழந்தையாக  விளங்கும் என்பதால் நிறைமாத கர்ப்பிணிகள் கூட கிரிவலம் வருவார்கள்.

சிவ ஸ்தலம் 

டேராபுக்கில் இருந்து டோல்மா செல்லும் ஏற்றம் சுமார் சுமார் 65 டிகிரி சாய்மானம் என்பதால் பாதை வளைந்து வளைந்து செல்கின்றது. இப்பாதையில்  இரண்டு முக்கியமான இடங்கள் உள்ளன அவை   Shiva Sthal என்னும் சிவ ஸ்தலம்  மற்றும் Sin testing stones  எனப்படும்   கர்மா சோதிக்கும் பாறைகள். டோல்மா  ஏறும் போது சிவஸ்தலத்தை தாண்டுபவர்கள் புதுஜன்மம் எடுப்பதாக ஐதீகம்.    நாம் புனிதமடைந்த பிறகே அன்னை பார்வதியை டோல்மாவில் தரிசிக்க இயலும். சிவ ஸ்தலத்தை வணங்கும் திபெத்தியர்களை தாங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காண்கின்றீர்கள். 

கர்மா சோதிக்கும் பாறைகள்


இரு பாறைகளுக்கிடையில் சிறிய இடைவெளி உள்ளது  அதில் புண்ணிய பாவம் அற்றவர்கள் மட்டுமே அதாவது புனிதர்கள் மட்டுமே நுழைந்து வெளியே வர முடியும் என்பது ஐதீகம். படத்தில் ஒரு திபெத்தியர் பாறைகளின் இடையே  புகுந்து வெளியே வருவதைக் காண்கின்றீர்கள். 

திருமதி  ரேவதி  சேகர் மற்றும் குமாரசாமி போர்ட்டருடன் 



கையில் ஆக்சிஜன் சிலிண்டருடன் ஒரு சீனப்பெண்

குடும்பம் குடும்பமாக சிரத்தையுடன் கிரி வலம் வந்து கொண்டிருந்தனர். ஒரு சீன பெண்மணிக்கு மிகவும் மூச்சிரைத்தது.  அவருடன் யாரும் இருக்கவில்லை.  ஒரு பாறை மேல் அமர்ந்து சிறிது நேரம் ஆக்சிஜன் எடுத்துக்கொண்டு  ஏதும் நடவாதது போல அநாசயமாக எழுந்து மலையேற்றத்தை தொடர்ந்தார் .  



டோல்மாவிற்கான இறுதி ஏற்றம் 

மெல்ல மெல்ல மலையேறினோம் ஒரு அடி ஏறினால் இரு அடி சறுக்கல் என்பது போல மெதுவாகவே நின்று நின்று மூச்சு வாங்கிக்கொண்டே மேலே ஏற முடிந்தது.  டோல்மாவை நெருங்கும் சமயம் மலை முகட்டிலிருந்து  இன்னொரு முகடுவரை பிரார்த்தனை கொடிகள் கட்டியிருந்தனர்.  அது அப்படியே விதானம் அமைத்தது போல நிழல் கொடுத்தது இவ்வளவு நெருக்கமாக கொடிகள் கட்டியிருந்தனர். இப்படி ஒரு கொடி விதானத்தின் கீழ் சென்ற போது லலிதா நவரத்ன மாலையின்

அந்தி மயங்கிய வான விதானம் 
   அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை

சிந்தை நிறம் பவளம் பொலி பாரோர் 
     தேம்பொழிலாமிது செய்தவள் யாரோ

எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்
   எண்ணுபவர்க்கருள் எண்ணம் அளிப்பாள் 

மந்திரவேத மயப்பொருள் ஆனால் 
மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே    என்னும் பாடல்தான் மனதில் தோன்றியது. அன்னை மலைமகளை, பார்வதியை, கௌரியை, அன்னபூரணியை. ஜகத்ஜனனியை, கருணைக் கடலை மனதார துதித்துக்கொண்டே  இறுதி ஏற்றத்தில் ஏறினோம். 






டோல்மாவை நெருங்குகின்றோம் 



கண்டோம் அன்னையை 


அன்னையை தரிசித்த ஆனந்தத்தில் குமாரசாமி ஐயா

டோல்மாவில் உள்ள ஒரு பாறையே  நமக்கு பார்வதி தேவி திபெத்தியர்களுக்கு   தாரா தேவி. எனவே டோல்மா கணவாயை திபெத்தியர்கள் தாரா கணவாய் என்றும் அழைக்கின்றோம். சிவசக்தியின் அருளால் எந்தவித துன்பமும் இன்றி எழுவரும் டோல்மாவை அடைந்து  அன்னையை லலிதா சகஸ்ரநாமம் கூறி மனதார  உலக நன்மைக்காக வழிபட்டோம். டோல்மாவில் சிறிது உறைபனி இருந்ததால் வழுக்கியது பார்த்து பார்த்து அடி வைக்க வேண்டி இருந்தது. அன்னையின் காலடியில் சிறிது நேரம் இருந்தபின் இறக்கம் துவங்கியது. 


சிறிது தூரம் இறங்கிய பின் அன்னை  மரகதவல்லி மீனாட்சி நீராடும் மரகதப்பச்சை  கௌரி குளத்தை தரிசனம் செய்தோம். 






கௌரி குளம்

உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்துஎன் உளம் மன்னி 
கருத்துஇருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானை தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாய் அடியேன் அணி கொள் கயிலை(தில்லை) கண்டேனே!

                                                                                                                            யாத்திரை தொடரும் . . . . . . 

2 comments:

ப.கந்தசாமி said...

மிகவும் மனத்திண்மை வேண்டும்.

S.Muruganandam said...

//மிகவும் மனத்திண்மை வேண்டும்//

உடன் சிவசக்தியின் அருளும் வேண்டும்.