Wednesday, November 26, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -24

மானசரோவர் கிரிவலத்தின் நிறைவு நாள்

18ம் நாள் குஹூவிலிருந்து கிஹூவரை பேருந்து பயணம் 39 கி.மீ


ஜைடி(கிஹூ) முகாமில் இருந்து திருக்கயிலாயத்தின் தரிசனம்

******************

அப்பர் பெருமான் அருளிச்செய்த
போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்


பெருகி யலைக்கின்ற வாறே போற்றி


பேரா நோய்பேர விடுப்பாய் போற்றி


உருகி நினைவார்தம் உள்ளாய் போற்றி


ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி


அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி


ஆரும் இகழப் படாதாய் போற்றி


கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (19)

*************


அன்று காலையில் எழுந்த போதே சீதோஷ்ணம் நன்றாக இல்லை, குர்லா மாந்தாத்தா மலை முழுவதும் இரவு பெய்த பனியால், வெள்ளிகவசம் போர்த்தியது போல் காட்சியளித்தது. ஒரு அரை மணி நேரத்தில் ஆலங்கட்டி மழையும் தொடங்கியது. எனவே பயணம் செய்ய முடியாதென்றால் இன்றும் இங்கேயே தங்கி் நேரடியாக தக்லகோட் செல்லலாம் என்று முடிவெடுத்தோம், அதே சமயம், நேபாள் வழியாக வந்த குழுவினருக்கு துன்பமாக முடியுமே என்றும் யோசனை செய்தோம். இறையருளால் அடுத்த ஒரு மணி நேரத்தில் சீதோஷ்ணம் நன்றாக சரியாகிவிட்டது. எனவே கிஹூவிற்கு (Qihu) பேருந்தில் புறப்பட்டோம், வழியெங்கும் ஆற்றில் தண்ணீர் வெகு வேகமாக ஓடின.

மேகங்கள் மூடிய நிலையில் மானசரோவரின் அழகு

வழியிலே காட்டு குதிரை, ஒன்றை பார்த்தோம். செல்லும் வழியில் ஒரு இடத்தில் மான சரோவர் கரை ஓரத்தில் நிறைய கற்கள் ஒதுங்கியிருந்தன , நாங்கள் இறங்கி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சிவலிங்கங்களை(கற்களை) சேகரித்தோம். மானசரோவரின் ஒவ்வொரு கல்லும் சிவலிங்கம் தான். எனக்கு ஒரு ஓம் பொறித்த கல்லும், ஒரு சங்கு வடிவக் கல்லும் கிடைத்தது. பின் கிஹூ (Qihu)புத்த விகாரத்தை அடைந்தோம். அங்கு கரையோரம் சிவப்பு வண்ண மற்றும் பச்சை வண்ண மணல்கள் இருந்தன. சிலர் அவற்றையும் தங்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்றனர். நான்காவது முறையாக இங்கு மானசரோவரில் நீராடினோம்.
ரிஷிகேஷ் பரமார்த்த நிகேதன் சித்தானந்த சுவாமியின் பக்தர்கள்
கட்டிக்கொடுத்த கிஹு தங்கும் விடுதி.


பின் மதிய உணவு சமயத்திற்கு கிஹூவை அடைந்தோம். கிஹூ ,ஜைடி (Zaidi) என்றும் அழைக்கப்படுகின்றது. அங்கு ரிஷிகேஷை சார்ந்த பரமார்த்த நிகேதனினின் சுவாமி் சித்தானந்தா ( ஆஸ்தா டி.வியில் கங்கை ஆரத்தி நடத்தும் சுவாமி) அவர்களின் பகதர்களால் கட்டப்பட்ட சுற்றுலா இல்லத்தில் தங்கினோம். இங்கு ஒரு சுடு தண்ணீர் ஊற்று உள்ளது. இங்குள்ள புத்த விகாரம் ஒரு குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. சிறிது தூரம் மானசரோவர் கரை ஓரம் நடந்து விட்டு வருவோம் என்று புறப்பட்டோம், புறப்பட்டபோது žதோஷணம் நன்றாக இருந்தது, அங்கிருந்த ஒரு குகையை சென்று பார்த்துக் கொண்டிருந்தோம் திடீரென்று žதோஷணம் மாறியது, மானசரோவரில் அலைகள் கடல் அலைகள் போல எழுந்தன, பெருங்காற்று வீசத்தொடங்கியது. மழை வரும் போல் தோன்றியது நாங்கள் அவசர அவசரமாக முகாம் திரும்பினோம். அப்ப்போதுதான் உயர் மட்டங்களில் அதிகமாக உடற்பயிற்சி செய்தால் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்தோம். அந்த ஆண்டவன் எவ்வளவு கருணையுடன் எங்களை நடத்தியுள்ளான் என்பதற்கு இந்த ஐந்து நிமிடம் ஒரு சான்று.

மலைமேல் அமைந்துள்ள கிஹூ புத்த விகாரம்

அன்று இரவு சுமார் இரண்டு மணி நேரம் பிரம்ம முஹூர்த்த நேரத்தில் சென்று மானசரோவர் கரையில் அமர்ந்திருந்தேன் ஆனால் நட்சத்திர தரிசனம் கிடைக்கவில்லை, அடியேன் முழு மனதுடன் முயற்சிக்கவில்லை என்பதாலோ என்னவோ? முழு யாத்திரையில் இது ஒன்று மட்டுமே ஒரு சிறு குறை.இந்த பதினெட்டாம் நாள் சிவ சக்தியின் கருணையினால் மானசரோவர் கிரிவலம் முடித்த நாள்.

No comments: