Sunday, October 04, 2009

கைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 -1


ஒரு தடவை திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த மலையரசன் பொற்பாவையுடன் அமர்ந்து அருள் பாலிக்கும் அந்த திருக்கயிலை அரசரின் மாப்பெரும் கருணையை மறக்க முடிவதில்லை. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று அந்த சிவபெருமானின் கருணையை எப்போதும் எல்லோருக்கும் இயம்ப வேண்டும் என்ற அவா எப்போதும் அவர்கள் மனதில் இருக்கும்.

அடியேன் திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்கு சென்ற போது அப்போது தலை நகர் டெல்லியில் எங்கள் குழுவினருக்கு உணவுப் பொருட்களும் மருந்து பொருட்களும் தந்து பேசிய கைலாஷ் மானசரோவர் யாத்ரா சமிதி தலைவர் அவர்கள். எப்போது நான் கட்டிலில் சிறிது சாய்ந்தாலும் அந்த திருக்கயிலை நாதரின் அந்த காட்சிகள்தான் மனதில் நிற்கின்றன என்று கூறினார் அப்போது அது எதோ மிகைப்படுத்தப்பட்ட வாசகம் போலத் தோன்றியது. சிவ சக்தியின் தரிசனம் பெற்ற பின்புதான் அதன் உண்மை விளங்கியது. அல்லும் பகலும் அனவரதமும் அந்த காட்சி மனதை விட்டு அகலுவதே இல்லை. எப்போதும் அந்த திருக்கயிலை காட்சிதான் மனதில் அகலாது ஒடுகின்றது.


ஆகவேதான் இந்த தொடரை ஆரம்பித்து பல் வேறு புண்ணியர்களின் திருக்கயிலாய தரிசனத்தை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் படங்கள் மும்பையில் (பாம்பே) வசிக்கும் திரு.பிரஷாந்த் கோட்டிகர் அவர்களுக்கு அம்மையப்பர் அளித்த தரிசனம். இவருடன் அடியேனுடன் இரண்டாம் முறையாக திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற்ற திரு.முட்கல் அவர்கள் ஆறாவது முறையாக தொடர்ந்து இடைவிடாமல் சென்று வந்திருக்கிறார் என்பதை அறிந்து சிவசக்திக்கு நன்றி செலுத்தினேன். இனி திருக்கயிலை நாதரின் யாத்திரை படங்களை பார்த்து மகிழுங்கள். கூடவே சிறிது குறிப்புகள் தங்களுக்கு உதவியாக இருக்கும்.


அன்ன பூர்ணா சிகரம்

முதலில் நாம் பார்க்கும் தரிசனம் அன்னபூரணி சிகரம். புதுடெல்லியில் மூன்று நாட்கள் தங்கி, மருத்துவ பரிசோதனை முடித்து பின் குழு விசா பெற்று மற்ற வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்த பின் டெல்லியில் இருந்து கிளம்பி இமயமலையின் ஸ்பரிசம் பெற்று மூன்று நாட்கள் பயணம் செய்த பின் தாரூச்சூலா( Dharuchula ) ஆதார முகாம் அடைந்து பின்னர் மாங்டி (Mangti) அடைந்து நடைப்பயணத்தை துவங்குகிறோம். முதல் நாள் காலாவில் ( Gala ) தங்குகிறோம் பின்னர் 4444 படிகள் இறங்கி பின் நடைப் பயணத்தின் இரண்டாம் நாள் புத்தியில் (Budhi ) தங்குகின்றோம். பின்னை ஒரு கடுமையான ஏற்றம் ஏறி சியாலே ( Chiyaleh) சமவெளியை அடைகின்றோம். சியாலேவில் இருந்து அன்னை பார்வதியின் நாமம் கொண்ட இந்த பனி மூடிய சிகரங்களின் தரிசனம் பெறுகின்றோம். அந்த அன்னையை இமவான் மகளாக பிறந்து கடுந்தவம் செய்த அன்னை பர்வதராஜன் மகள் பார்வதியின் திருத்தாள்களை வணங்கி 2009 யாத்திரையை தொடர்வோம்.


இந்தோ திபெத் பாதுகாப்புப் படையினர் (ITBP) திருக்கயிலாய யாத்திரை செல்லும் யாத்திரிகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். மிர்த்தியில் (Mirthi) இருந்து அவர்கள் யாத்திரிகளுடன் கூடவே வருகின்றனர். பல்வேறு இடங்களில் நாம் நடைபயணம் செல்லும் போது தங்களுக்கு கிடைக்கும் ரேஷனிலிருந்து தேநீர், உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றை நமக்காக வழங்குகின்றனர். அவர்கள் யாத்திரிகளுக்கு செய்யும் சேவை அளப்பரியது. அவர்களுக்கு மிக்க நன்றிகள். கூஞ்சியில் (Gunji)இருந்து காலாபானி செல்லும் வழியில் ITBPயினர் இவ்வாறு தேநீர் அளித்து யாத்திரிகளை உற்சாகப்படுத்துகின்றனர்.


நாக - நாகினி சிகரம்

புத்தியில் இருந்து கிளம்பிய யாத்திரிகள் சியாலேவை அடைந்து பூச்சமவெளியில் ( Flower Valley) அழகிய மலர்களின் தரிசனம் கண்டு காளி நதியின் கரையோரமாக பயணம் செய்து கூஞ்சியை அடைந்து அங்கு தங்குகின்றோம். உயர் மட்டத்தில் ஒரு நாள் ஓய்வு அன்று இரண்டாவது மருத்துவ சோதணை நடைபெறுகின்றது. பின்னர் கூஞ்சியில் இருந்து காலாபானிக்கு செல்லுகின்றோம். காலாபானியி செல்லும் வழியில் நாம் காணும் சிகரம் இந்த நாக பர்வதம். பாம்பு படம் எடுப்பது போல் தோன்றுவதால் இச்சிகரத்திற்கு இப்பெயர். கூடவே நாகினி (பெண் பாம்பு) சிகரத்தையும் காண்கின்றோம். காலாபானியிலிருந்தும் இச்சிகரத்தை காணலாம்.

வியாசர் குகை - காலாபானி

நாம் காலாபானியை நெருங்கும் போது வியாசரின் குகையைக் காணலாம். விஷ்ணுவின் அம்சமாக பிறந்து வேதங்களை நான்காக தொகுத்து நாம் உய்ய அளித்தவர் பராசரரின் புதல்வர் வேதவியாசர். அவரை இப்பகுதி மக்கள் தங்கள் தெய்வமாகவே கொண்டாடுகின்றனர். அவர் தங்கி உலவிய பகுதி என்பதால் இச்சமவெளி பியான்ஸ் சமவெளி என்றழைக்கப்படுகின்றது. கூஞ்சியில் வியாசருக்கு ஒரு கோவில் உள்ளது. செங்குத்தான மலையின் மேல் பகுதியில் குகை அமைந்துள்ளது. ITBPயினர் ஒரு தடவை மேலிருந்து இறங்கி குகைக்குள் சென்று பார்த்த போது குகை 18 அடி நீளம் இருந்ததைக் கண்டனர். உள்ளே யாக குண்டம், கமண்டலம் முதலியன இருந்தன.

ஓம் பர்வதம் - நாபிதாங்

காலாபானியிலிருந்து கிளம்பி நாபிதாங்கை அடைகின்றோம். நாபிதாங் ஒரு முக்கூடல். இந்திய நேபாள சீன எல்லைகள் இங்கு சங்கமிக்கின்றன. மேலும் காளி நதி உருவாக காரணமான நாபிதாங் கால்வாய் என்னும் நதி இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றது. மேலும் மூன்று சிகரங்கள் இங்கிருக்கின்றன. அவற்றுள் நடு நாயகமாக அமைந்திருப்பது ஓம் பர்வதம். தேவ நாகரி ஓம் என்னும் ஏகாக்ஷ்ரத்தை பனியில் இங்கு நாம் காணலாம். மற்ற இரண்டு சிகரங்கள் திரிசூல பர்வதம் மற்றும் நாபி பர்வதம்.

லிபு லே கணவாய் வழியாக சீனப் பகுதியில் நுழைந்து தக்லகோட்டில் ஒரு நாள் தங்குகின்றோம். பின்னர் பேருந்து மூலம் திருக்கயிலாய ஆதார முகாம் தார்ச்சன் அடைவதற்கு முன்னர் முதலில் இராவணன் ஏரியை கண்ணுறுகின்றோம். நமக்கு முதலில் திருக்கயிலை நாதரின் தரிசனம் கிடைப்பதும் இராக்ஷ்ஸ் தால் ஏரியிலிருந்துதான். இப்படங்களை எடுத்த திரு, பிரகாஷ் கோட்டிகரையும் காண்கின்றீர்கள். அவருக்கு நன்றிகள்.


தார்ச்சன் ஆதார முகாமில் இருந்து நமக்கு கிடைக்கும் திருக்கயிலையின் அருகாமை தரிசனம் இது. முக்கண்களுடன் கூடிய முக தரிசனமும், ஜடாமுடியின் மேற்பாகத்தையும் இந்த அகோர முகத்தில் நாம் தரிசனம் செய்கின்றோம்.

மேலே கிளிக்கினால் திரு. பிரகாஷ் அவர்களின் ஆல்பத்தை தாங்கள் காணலாம்.

Click above to see the original album of Shri. Prakash Gotikar and below to view his blog with more photos.

கீழே கிளிக்கினால் அவரது வலைதளத்தை இன்னும் நிறைய படங்களுடன் ஆங்கிலத்தில் படிக்கலாம்

http://prashantghotikar.wordpress.comதிருக்கயிலை நாதரின் தரிசனம் தொடரும். . . . . . . .

12 comments:

துளசி கோபால் said...

படங்களுக்கும் பதிவுக்கும் நன்றி கைலாஷி.

என்னால் போகமுடியுமுன்னு தோணலை. இப்படியே தரிசனம் செஞ்சுக்கறேன்.

போய்வந்தவர்களைப் பார்த்த புண்ணியம் கொஞ்சம் இருக்கு.

திருப்பாற்கடலுக்குக் கூட்டிப் போகும்போது வழியில் கயிலையைக் காமிக்கிறேன்னு பெருமாள் சொல்லி இருக்கார்.

துளசி கோபால் said...

அந்த ஏரியின் பெயர் ரக்ஷா ன்னு இருக்கணும் கைலாஷி

வருத்தப்படாத வாலிபன். said...

a very nice travelogue sir.thanks for sharing and expecting more.sorry for english typing.

prabakar.l.n said...

nanbare thaankal kitaitharikariya tharisanam kandu ulleerkal . thangaludaiya pathivai kandu manam niraiya makilchi adaithen thankaludaiya pugai padankalum nandaraka ullathu migavum arumai . thaankal ennudaiya web site oru parunkal athilum thenkailaayam ullathu paarthu vittu sollunkal

www.sathuragirisundaramahalingam.blogspot.com , www,sathuragiri.ning.com

prabakar.l.n said...

www.sathuragiri.ning.com

Kailashi said...

//திருப்பாற்கடலுக்குக் கூட்டிப் போகும்போது வழியில் கயிலையைக் காமிக்கிறேன்னு பெருமாள் சொல்லி இருக்கார்.//

வைகுண்டத்துக்குத்தானே போகணும்?

உங்களுக்கு மட்டும் திருப்பாற்கடலா??

எனக்கும் கொஞ்சம் பெருமாளிடம் சிபாரிசு பண்ணுங்களேன் துளசிம்மா.

பூரண சரணாகதியெல்லாம் பண்ணியாச்சு.

Kailashi said...

//அந்த ஏரியின் பெயர் ரக்ஷா ன்னு இருக்கணும் கைலாஷி//

இராவணன் அமர்ந்து தவம் செய்த ஏரி என்பதால் ராக்ஷஸ் தால் என்று அழைக்கப்படுகின்றது துளசியம்மா.

Kailashi said...

//a very nice travelogue sir.thanks for sharing and expecting more.//

Welcome வருத்தப்படாத வாலிபன் சார், ஆங்கிலத்தில் பின்னூட்மிட்டதற்கு வருத்தப்பட வேண்டாம்.

The posts will continue till the Lord Shiva wills so visit in future also and have the darshan of the Lord.

துளசி கோபால் said...

மன்னிக்கணும் கைலாஷி.

ராவணன் தவம் செய்த இடமா? தெரியாமப்போயிருச்சே....

நீங்க கொடுத்த புகைப்படங்களுக்கான சுட்டியில் ரக்ஷான்னு இருந்தது. அதான்.... அப்படி நினைச்சுட்டேன்.

Kailashi said...

//மன்னிக்கணும் கைலாஷி.//

என்ன பெரிய வார்த்தைகளையெல்லாம் பயன் படுத்துகின்றீர்கள் துளசியம்மா.

எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை. கற்றது கை மண் அளவு கல்லாதது கடல் அளவு.

எல்லோரும் இறைவனின் அற்புத தரிசனத்தை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இச்சேவையை செய்து வருகின்றேன். அறியாமல் தங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகின்றேன்.

Kailashi said...

அன்பு பிரபாகர்

தங்களுடைய சதுரகிரி தரிசனம் வலைப்பூ கண்டேன். அற்புதம் அற்புதம்.

மாதா ச பார்வதி பிதா தேவோ மஹேஸ்வர:

பாந்தவா சிவ பக்தாச்ச, ஸ்வதேசோ புவன த்ரய:

என்று ஆதி சங்கரர் கூறியபடி, சிவ பக்தர்களுக்கு தாய் மலை மகள் பார்வதி, தந்தை சிவபெருமான், உறவினர்கள் சிவனையே அல்லும் பகலும் அனவரதமும் துதி செய்யும் சிவபக்தர்கள், மூவுலகமும் அவர்களுக்கு உரியது.

தாங்களும் சிவத்தொண்டு செய்து வருகின்றீர்கள். முடிந்த போது அடியேனும் சதுரகிரி யாத்திரையில் கலந்து கொள்கின்றேன்.

தங்கள் சேவை தொடர சிவபெருமான் அருள் புரியட்டும்.

Kailashi said...

அடியேனும் திரு. பிரகாஷ் கோட்டிகரின் ஆல்பம் சென்று குறிப்பாகப் பார்த்தேன். ஆம் துளசி டீச்சர் அவர் ரக்ஷா தால் என்றுதான் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு மின்னங்ஞ்சல் அனுப்பி, தலைப்பை மாற்ற விண்ணப்பித்து கொள்கிறேன்.