Thursday, June 19, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -7

டெல்லியில் மூன்றாம் நாள்அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்

திருக்கயிலாயம்ஒம் நமசிவாயமருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி


மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி


உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி


உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி


திருவாகி நின்ற திறமே போற்றி


தேசம் பரவப்படுவாய் போற்றி


கருவாகி ஓடும் முகிலே போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (3)
தீர்த்தா யாத்திரா கமிட்டி தலைவர் மற்றும்

L.O திரு பொனால் அவர்களுடன் ஆசிரியர்

டெல்லி அரசின் பை வழங்கும் போது

மூன்றாம் நாள் காலையில் அந்த வேயுறு தோளி பங்கர் விடமுண்ட கண்டரின் மாப்பெருங் கருணையினால் இந்திய அரசின் விருந்தாளிகளாக வெளியுறவு அமைச்சகம் சென்றோம் அங்கு எங்களுக்கு கைலாஷ் மானசரோவர் யாத்திரை பற்றிய ஒரு வீடியோப் படம் காண்பிக்கப்பட்டது. சீனப் பகுதிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிகூறினார் இணை செயலாளர்.கேமராவில் படம் எடுக்கும் போது சீன கட்டிடங்களை படம் எடுக்க வேண்டாம், அதே சமயம் இந்தியப் பகுதியில் எடுத்த புகைப்படங்களை சீனப்பகுதியில் கொண்டு செல்ல வேண்டாம்.சீனக்கடைகளில் பொருள்கள் வாங்கச் செல்லும் போது கவனமாக இருக்கவும். ஒரு யாத்திரி ஒரு கணணிக் கடையில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த போது அவர் கைபட்டு ஒரு கணணி பழுதாகிவிட்டதால் அவர் மீது கடைக்காரர் வழக்கு பதிவு செய்தார், அவர் துன்பத்திற்கு உள்ளாக நேர்ந்தது L.O அவர்களின் அரசை கலந்துகொண்டு பின் நடவடிக்கை எடுத்து வழக்கு திரும்பப்பெறப்பட்டது ஆனால் அவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டி வந்தது, எனவே சீனப்பகுதியில் கடைகளில் கவனமாக இருக்கவும்.அங்கு தலாய் லாமாவைப்பற்றி யாருடனும் ஏதும் பேச வேண்டாம்.


யாத்திரிகளில் சிலர்நாங்கள் தினமும் உங்கள் L.O உடன் தொடர்பு கொண்டு உங்கள் நலன் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டிருப்போம் பயப்படாமல் சென்று வாருங்கள் என்று ஆசி கூறி அனுப்பினார்கள். மேலும் KMVN க்கு தர வேண்டிய மீதி ரூபாய் 10500/- செலுத்தி இரžது பெற்றுக்கொண்டாம் எங்களது பாஸ்போர்ட்டும் திரும்பக்கிடைத்தது.


மதிய உணவிற்கு குஜராத் சதன் வந்து விட்டோம். அதற்குப்பின் டெல்லியில் கைலாய கிரிவலத்தின் போது வேண்டிய உணவுப் பொருள்களையும், மருந்துகளையும் அவரவர்களுக்கு வேண்டிய சொந்த பொருட்களையும் வாங்கிக் கொண்டோம்.


இரவு டில்லி அரசின் சார்பாக தீர்த்த யாத்திரை கமிட்டியினர் விருந்து வழங்கி கௌரவித்தனர். அப்போது டில்லி அரசின் சார்பில் அனைவருக்கும் ஒரு பை வழங்கப்படது அதில் ஒரு தொப்பி, ஒரு மழை கோட், பூஜை சமான்கள் அடங்கிய ஒரு பெட்டி முதலியன இருந்தன. பெட்டியில் கற்பூரம், ஊது பத்திகள், செந்து‘ரம், அட்சதை , ஒரு 108 ருத்ராக்ஷ்ங்கள் கொண்ட ஒரு மாலை முதலியன இருந்தன. டெல்லி வாசிகளுக்கு அந்த அரசு ரூபாய் 10000/- சன்மானமனமாக வழங்கியது அது போல குஜராத் அரசும் அந்த மாலத்தில் இருந்து யாத்திரைக்கு வருபவர்களுக்கு ரூபாய் 20000/- சன்மானம் வழங்குகின்றது. மேலும் அவர்களுக்கு ஒரு தொப்பி, ஒரு பை ஒரு பௌச் முதலியன வழங்குகின்றது, அவர்கள் டெல்லி வந்து செல்வதற்கான கட்டணத்தையும் குஜராத் அரசே வழங்குகின்றது. எனவே தானோ என்னவோ எங்கள் குழுவில் 12 பேருக்கு மேல் குஜராத் மாநிலத்தவர்கள் இருந்தனர். மற்ற குழுவினரிலும் குஜராத்தை சேர்ந்தவர்கள் அதிகம் செல்கின்றனர் என்று அறிந்தோம். மற்ற மாநில அரசுகள் ஏதும் மானியம் தருவதில்லை.யாத்திரை சுபமாக நடக்க சிவபெருமானுக்கு பூசனை
தீர்த்த யாத்திரை கமிட்டி தலைவர் திரு ஷிவ் குமார் சர்மா ஒரு கடிதம் வாசித்து காண்பித்தார் அதில் போன வருடம் சென்ற ஒரு அம்மையார் மானசரோவர் தடாகத்தில் இரவில் தேவர்கள் நட்சத்திர ரூபமாக வந்து நீராடி கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறிலினிலடக்கிய விமலனையும், பார்வதித் தாயையும் வணங்கிச் சென்றமை குறித்து எழுதியிருந்தார். அவரும் எங்களை அதன் அற்புத காட்சியைக் காணுமாறு வேண்டினார்.


அன்று இரவு பொது பொருட்களான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள், பூஜை பொருட்கள் அனைத்தையும் முதலில் தண்ணீர் புகாத வகையிலும் அதே சமயம் மட்டக் குதிரைகளில் எடுத்து செல்லும் விதமாகவும் கட்டி வைத்தோம்.முதலிலேயே சொன்னது போல் நமது பொருட்கள் அனைத்தும் மேலே கோவேறு கழுதைகள் மூலம் தான் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் வழியில் மழை, பனி, நீர் வீழ்ச்சிகள் ஆகியவற்றை கடந்து செல்லவேண்டும் என்பதால் நமது பொருட்களை தண்ர் புகாத வண்ணம் நமது பொருட்களை நன்றாக கட்டி(pack) எடுத்து செல்ல வேண்டும். ஒரு சர்ட், பேண்ட், பனியன், ஜட்டி முதலியவற்றை முதலில் ஒரு பிளாஸ்டிக் கவரில் பேக் செய்து பின் டேப்பால் அதை ஒட்டி விட வேண்டும் அதன் மேல் என்ன பொருட்கள் உள்ளன என்று எழுதினால் எடுக்கும் போது உதவியாக இருக்கும். அதே போல் எல்லா பொருட்களையும் பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்து, நமது பைகளில் வைக்க வேண்டும். பின் அந்தப்பையை ஒரு உரப்பையில் வைத்து கட்ட வேண்டும் பின் இன்னொரு பையினால் மூடி து‘க்குவதற்கு ஏதுவாக கட்ட வேண்டும். ஏனென்றால் கோவேறு கழுதைகள் மேலேறும் போது மலையை உரசிக் கொண்டு தன் செல்லும், பாதையின் அடுத்த ஒரம் அதள பாதாளம் அதிலும் காளி நதி வேகத்துடன் ஓடுகின்றது என்பதால் அவை மலையை ஒட்டியே செல்லும். அப்போது நமது வெளி உரப்பை சேதமடைய வாய்ப்பு உள்ளது எனவே இரண்டு பைகளை வைத்து இரண்டையும் தனித்தனியாக கட்டுவது நல்லது. மூட்டைகளின் மேல் அடையாளத்திற்காக தங்கள் பெயர், குழு எண் (Batch No) , வருடம், மற்றும் தங்கள் வரிசை எண்ணை எழுத வேண்டும். இவ்வாறு நாங்கள் எடுத்துச் செல்லும் பொருட்கள் எல்லாவற்றையும் பேக் செய்து எங்கள் சொந்த பேக்குகள் இரண்டையும் பேக் செய்ய நள்ளிரவு ம 12 ஆனது.


இவ்வாறு எதிர்பார்ப்புகளோடும், பிரார்த்தனையோடும், மற்றவர்கள் அன்போடும் மரியாதையோடும், ஆம் எங்களுக்கு கிடைத்த மரியாதையை வர்க்க வார்த்தைகளே இல்லை. என்னுடன் பணி செய்த சகோதரி முதலிலேயே கூறி இருந்தார் மாலைகளை சுமந்து சுமந்து கழுத்தே வலித்து விடும் என்று, அவ்வாறே நடந்தது ஒவ்வொரு சமிதியினரும் வழியில் உள்ள கிராம மக்களும் காட்டிய அன்பும், மரியாதையும், பக்தியும் அளவிடமுடியாதது நம்மை சிவ சொரூபமாகவே அவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு டெல்லியில் மூன்று நாட்கள் கழிந்தன. அடுத்த நாள் காலை ஒரு ஆனந்த யாத்திரைக்கு புறப்படுகின்றோம் சகல புவனத்தையும் படைத்தும், காத்தும், அழித்தும் விளையாடும் அந்த சர்வேஸ்வரனையும் சர்வேஸ்வரியையும் கண்டு தரிசனம் செய்யப்போகின்றோம் என்ற நிம்மதியில் தூங்கச்சென்றோம்.யாத்திரை தொடரும்...............No comments: