Sunday, October 04, 2009

கைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 - 2

கண்ணார் அமுதனே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

கிரீசன் என்று போற்றப்படும் மணிமிடற்றண்ணல், மாதொரு பாகன், சந்திரனுக்கு அருளிய பரம கருணா மூர்த்தி தியாகராஜன் சிவபெருமான், மஹா கௌரி, பர்வத புத்ரி, உமைநங்கையுடன் நித்ய வாசம் செய்து அண்ட சராசரங்களையும் பரிபாலிக்கும் தலம் தான் திருக்கயிலாயம். பூலோகத்தில் நாம் பூத உடலுடன் சென்று தரிசிக்கக் கூடிய தலம் கயிலை மலைதான். அந்த திருக்கயிலை தரிசனமும் மானசரோவர் தீர்த்த ஸ்நானமும், சிவசக்தியின் திருவருளாலேதான் சித்திக்கும். அவன் அருளால் அவன் தாள் வணங்கினால் நிச்சயமாக அவரின் தரிசனம் கிட்டும். இவ்வுணமையை அன்பர்கள் அனைவருக்கும் கூறும் முயற்சியே இப்பதிவுகள். உள்ளன்புடன் தினமும் அம்மையப்பரின் முன் திருவிளக்கு ஏற்றி வைத்து , கனக சபேசா, கயிலை வாசா உங்கள் தரிசனம் காட்ட வேண்டும் என்று வேண்டுபவர்களை அவர் என்றுமே கை விடுவில்லை. அது போல கடந்த ஒரு வருட காலமாக சந்திர சேகரரின் தரிசனம் பெற பிரார்த்தணை செய்து விளம்பரம் வந்த போது விண்ணப்பம் இட்டு முக்கண் முதல்வரால் அழைக்கப்பட்டு திருக்கயிலாயம் சென்று அவரின் தரிசனம் பெற்றவர் திரு, பிரகாஷ் கோட்டிகர் அவரது தரிசனத்தின் ஒரு பகுதியை முந்தைய பகுதியில் கண்டோம். மற்றும் சில காட்சிகளை இப்பதிவில் காணலாம்.

Shri Prakash Gotikar sincerely prayed to Lord Shiva and got this golden chance of darshan of Holy Kailash and a bath in Holy Manasarovar. If you also pray to Him sincerely you will not be let down by the Lord and Mother.


யமத்துவார் ( யமனுடைய வாயில்)

தார்ச்சன் ஆதார முகாமில் இருந்து யமத்துவாரம் வரை நாம் பேருந்தில் பயணம் செய்ய முடியும். இதுவரை யமனுடைய பகுதி, இதற்கு மேல் தேவ பூமி. அதாவது யமத்துவாரில் நுழைந்து வெளியே வந்தால் நாம் பிறப்பிறப்பை அறுத்து விட்டோம் என்பது ஐதீகம். மஹாபாரதத்தில் தர்ம புத்திரர் இங்கிருந்து சுவர்க்கம் சென்றார் என்று கூறுவோரும் உண்டு.

யமதுவாரத்தில் இருந்து நமக்கு திருக்கயிலை நாதரின் அகோர முகம் என்னும் தெற்கு முகத்தின் முழு தரிசனமும் நமக்கு கிட்டுகின்றது. கோரா என்றும் பரிக்கிரமா என்று திபெத்திய மொழியிலும் வடமொழியிலும் அழைக்கபப்டும் திருக்கயிலாய கிரிவலத்தை நாம் இங்கிருந்து தான் துவங்குகின்றோம்.

ஆமாம் முதன் முதலில் கிரி வலம் செய்தவர் யார் தெரியுமா? என்ன தெரியவில்லையா? சிறிது திருவிளையாடலை பற்றி யோசியுங்கள். அட சரியாக கண்டு பிடித்து விட்டீர்களே. சபாஷ் சொல்லிக்கோங்க. மாங்கனி பெற முதன் முதலாக அம்மையப்பரை வலம் வந்த விநாயகர் தாங்க நம்ம கிரி வலத்துக்கு முன்னோடி.


படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பஞ்ச கிருத்ய பாராயணர் உலகமெல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் அம்பலக் கூத்தர் ஆனந்த தாண்டவ நடராஜரின் தெற்கு முகமான அகோர முகத்தின் தரிசனம் காண்கிறீர்கள்.

மேலே முக்கண்ணுடன் கூடிய ஐயனின் முக தரிசனம், கங்கை தேவ லோகத்தில் இருந்து இறங்கிய போது அவர் தாங்கிய ஜடாமுடி, இராவணன் கயிறு கட்டி இழுத்த போது உண்டான அக்ஷய வடக்கயிற்றின் தழும்பு ஆகியவற்றை தக்ஷிணாமுர்த்தி, கங்காதரரின் இம்முகத்தில் தரிசனம் செய்கின்றோம்.


ஐயனுக்கு வலப்பக்கத்தில் சிறிய தொப்பி போல உள்ள பனி மூடிய சிகரம் தான் கணேசர் என்பது ஐதீகம். ஆகாய கங்கை வடியும் இடத்தை (ஜடா முடி) முழுதுமாக நாம் தரிசனம் செய்கின்றோம்.


அஷ்டபத் மலையிலிருந்து தான் நாம் திருக்கயிலை நாதரின் மிக அருகில் சென்று தரிசனம் செய்கின்றோம். இங்கிருந்து கணேசர், திரி நேத்ரம், ஜடாமுடி, மற்றும் நந்தியை தரிசனம் செய்யலாம். கீழே நாம் காண்பது அஷ்டபத் மலையின் தரிசனம். தற்போது அஷ்டபத் மலைக்கு வாகனங்கள் செல்லுகின்றன. நிறை ஒரு கிலோ மீட்டர் மட்டுமே நடைப்பயணம் செய்ய வேண்டும் திருக்கயிலை நாதரின் திருவடிகளின் இணையார் திருவடிகளில் வீழ்ந்து வணங்க.


திருக்கயிலயங்கிரியை இந்துக்கள் மட்டுமா தங்கள் தெய்வம் என்று வணங்குகின்றனர்? அவர்களுடன் புத்தர்கள், ஜைனர்கள், மற்றும் திபெத்தியர்களும் திருக்கயிலாயத்தை தங்கள் கடவுளாக வழிபடுகின்றனர். ஜைனர்களின் முதல் தீர்த்தங்கரரான ரிஷப தேவர் இங்குதான் மஹா நிர்வாணம் அடைந்தார் என்பது ஐதீகம். நாம் மேலே காண்பது முதல் தீர்த்தங்கரரின் நினைவிடம். இது அஷ்டபத்தில் உள்ளது. கூடவே திருக்கயிலாயத்தையும் நந்தி தேவரையும் நாம் தரிசனம் செய்கின்றோம்.வெள்ளிப்பனி
சூழ்ந்த திருக்கயிலையில் பால் வெண்ணீற்றுடன் பவள வண்ண எம்பெருமான் சிவபரம்பொருள், எல்லோருக்கும் எல்லா நலங்களையும் வழங்கும் சங்கரர் தன் பொற்கொடியாம் பச்சை பசுங்கொடி உமையம்மையுடன் கமனீயமான நவரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவர்ணமயமான ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் சிவசக்தியை தமது மூச்சுக்காற்றினால் குளிர்வித்துக் கொண்டிருப்பவர் நந்தியெம்பெருமான். ஐயனுக்கு எதிரே மேல் இருபடங்களிலும் நாம் ஐயனின் முதற்தொண்டர் , ஐயனை தினமும் தாங்கும் நந்திகேஸ்வரரையும் தரிசனம் செய்கின்றோம்.மேலே கிளிக்கினால் திரு. பிரகாஷ் அவர்களின் ஆல்பத்தை தாங்கள் காணலாம்.

Click above to see the original album of Shri. Prakash Gotikar and below to view his blog with more photos.

கீழே கிளிக்கினால் அவரது வலைதளத்தை இன்னும் நிறைய படங்களுடன் ஆங்கிலத்தில் படிக்கலாம்

http://prashantghotikar.wordpress.comதிருக்கயிலை நாதரின் தரிசனம் தொடரும். . . . . . . .

4 comments:

மாதேவி said...

"திருக்கயிலை தரிசனம்" படங்களுடன் விரிவான பதிவு.

மிக்கநன்றி.

Kailashi said...

வாருங்கள் மாதேவி முதல் தடவை வருகின்றீர்கள். இனி வரும் காலத்திலும் வந்து திருக்கயிலை நாதர் தரிசனம் பெறுங்கள்.

பித்தனின் வாக்கு said...

தங்களுக்கு கோடனா கோடி நன்றிகள், மிக நல்ல பதிவு. கைலாயங்கிரியை இன்றுதான் மிக அருகில் எடுக்கப்பட்ட அருகாமை புகைப்படங்களை பார்க்கின்றேன். மிக்க நன்றி.

Kailashi said...

அனைத்தும் சிவார்ப்பணம்.அகில உலகத்தையும் ஆட்டிவிப்பவர் அவர். வரும் காலத்திலும் வந்து தரிசனம் செய்யுங்கள் பித்தன் ஐயா.