Wednesday, May 15, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -12 (திருக்கயிலாய யாத்திரை-2012)

பஞ்சம் சிகரங்கள்



நைலம் அருகில் உள்ள 7000 மீ உயர பஞ்சம் பனிச்சிகரங்கள்



இவ்வாறு சுமார் இரண்டு  மணி நேரம் பயணம் செய்தபின் நைலாமிற்கு சற்று முன்னர் பஞ்சம் சிகரங்கள்(7000 மீ) என்னும் பனிமுடிய சிகரங்களை கண்டோம். அது அற்புத காட்சியாக இருந்தது. சிகரங்களை கண்டு களிக்கும் விதத்தில் காணும் மேடையும் அமைத்திருக்கின்றனர். அங்கிருந்து கீழிறங்கி சென்று சலசலத்து ஓடும் ஆற்றையும் கண்ணுற்றோம். இப்பகுதியில் சிறிது பசுமை உள்ளது. பஞ்சம் என்னும் புத்த குருமாரின் பெயரால் இந்த சிகரங்கள் அழைக்கப்படுகின்றன என்று எங்கள் சேர்ப்பாக்கள்  கூறினார்கள்.   அனைவரும் வண்டியை விட்டு இறங்கி பின் புலத்தில் சிகரங்கள் இருக்குமாறு பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மதிய நேரத்திற்கு நைலாம் வந்து சேர்ந்தோம். இன்றைய பயணம் செய்த தூரம் 35 கி.மீ தான் என்றாலும் 1400 மீ உயரம் ஏறியுள்ளோம். 

பஞ்சம் சிகரத்தின் அழகை இரசிக்கும்-
 புகைப்படம் எடுக்கும் குழுவினர்


 பஞ்சம் சிகரம் முன் புலத்தில் எங்கள் குழுவினர்

மதிய நேரத்திற்கு நாங்கள் நைலாம் நகரின் (3750மீ - 12300 அடி) சீ–சா–பாங்-மா என்னும் தங்கும் விடுதிக்கு சென்று சேர்ந்தோம். “எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாரதியார் அன்று பாடியது போல் இங்கு எங்கு நோக்கினும் சிவ பக்தர்கள்தான் கண்ணில் பட்டனர் அனைவரும் மலையரசன் பொற்பாவை உடனுறை திருக்கயிலை நாதரை தரிசனம் செய்ய வந்தவர்கள் அவரவர்கள் சுற்றுலா நிறுவனத்தரின் வண்ண வண்ண தொப்பிகளையும், கோட்டுகளையும் அணிந்து கொண்டு வலம் வந்து கொண்டிருந்தனர். 3750 மீ உயரம் என்பதால் காற்றிலேயே ஈரப்பதம் இருந்தது. வாடைக் காற்றும் வேகமாக வீசிக்கொண்டிருந்தது.


நாங்கள் 13 பேரும் ஒரே  நிறுவனத்தில் பணி புரிகிறோம்

சிகரத்தின் அழகை கண்டு களிக்கவும் ஆற்றைக் காண
 அமைத்திருக்கும் நடை மேடை மற்றும் படிகள்






அமர்ந்து அருமையான காற்றை அனுபவித்துக்
கொண்டு சிகரங்களை இரசிக்க மேடை


********************************






சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பதிகம்


திருக்கயிலாய மலையை எம்பிரான் தோழர் சுந்தரர் நொடித்தான் மலை என்று போற்றிப் பதிகம்  பாடியுள்ளார். நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும (நொடித்தல்- அழித்தல்) அழித்தல்  தொழிலை உடைய உருத்திரமூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால்  நொடித்தான் மலை  என்னும் பெயர் பெற்றது.




வெள்ளை யானையில் சுந்தர மூர்த்தி சுவாமிகள்  



சுந்தரர் வெள்ளை யானையில் திருக்கயிலாயம் சென்ற விழா திருமயிலையில் கொண்டாடப்படும் அழகை இங்கு சென்று படியுங்கள்



ஆனை உரித்தபகை அடி யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலஞ் செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே (2)

பொருள்: யான் கருவி கரணங்களை அறிவினால் ஆடக்கி அறிவே வடிவாய் உள்ள தண்ணாஈ உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன், அவ்வளவிற்கே திருக்கயிலை மலைக்கண் வீற்றிருக்கும் அம்முதல்வன், வானுலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம் செய்து ஏற்றிச் செல்லுமாறு,ஒர் யானையூர்தியை அருளினான். அஃது அவன் முன்பு யானையை உரித்தனால் நிலைத்து நிற்கும் பகைமையை அடியேனால் நீங்கச்செய்து, அதற்கு அருள் பண்ணக் கருதியதாலோ அல்லது அடியேனுக்கு அருளவோ!


தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .   

No comments: