Sunday, December 07, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -26



இந்தியா திரும்பினோம்

21 ம் நாள் லிபு கணவாயிலிருந்து காலாபானி 18 கி.மீ நடை பயணம்

இந்தியா திரும்பி வரும்போது
லிபு கணவாயில் காத்திருக்கின்றோம்


மலையரசன் பொற்பாவை சமேத திருக்கயிலை நாதரின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் தரிசனம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட 33 யாத்ரிகளும் அம்மையப்பரின் அற்புத தரிசனம் பெற்று, அவர்களை வலம் வந்து வணங்கி , பெறற்கரிய பேற்றுடன் மானசரோவரில் நீராடி, பிறந்த பிறப்பின் பலனை அடைந்து சீனப்பகுதியில் இருந்து பேருந்தின் மூலமாக லிபு லே கணவாய் வந்து சேர்ந்தோம். வருகின்ற இறுதி(16)குழுவினர் வர சிறிது கால தாமதமானதால் சிறிது நேரம் வெயில் காய்ந்த லிபு கணவாயில் ஒய்வு எடுத்து சிவசக்திக்கு நன்றி செலுத்தினோம்.


பாட்டான நல்ல தொடையாய் போற்றி


பரிசரியாமை நின்றாய் போற்றி


சூட்டான திங்கள் முடியாய் போற்றி


தூமாலை மத்த மணிந்தாய் போற்றி


ஆட்டான நஞ்சு ண்டமர்ந்தாய் போற்றி


அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி


காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி





செல்லும் போது கருக்கலில் சென்றதால் பாதையை சரியாக கவனிக்கவில்லை, இரண்டு கி, மீ செங்குத்தான இறக்கம், அதற்குப்பின் பாதை சமமாக செல்கின்றது லிபு கால்வாய் ஆற்றின் ஓரமாக. வழியெங்கும் பனி விழுந்திருந்தது, வழியில் வாசனை செடிகளை பறித்துக் கொண்டோம். திரும்பிவரும் போது நாபிதாங்கில் மதிய உணவு உண்டோம், நாங்கள் ஒப்படைத்த பிலிம் சுருள்களை திரும்ப வாங்கிக் கொண்டோம்.

திரும்பிவரும் போது கிடைத்த ஓம் பர்வத தரிசனம்

ஓம் பர்வதத்தின் தரிசனம் இப்போதும் கிடைத்தது. வரும் போது நாபிதாங்கில் தங்கவில்லை நேராக காலாபானி வந்து விட்டோம். மேலே ஏறும் போது உடல் உயர் மட்டத்திற்க்கு தயாராக வேண்டும் என்பதால் லிபு கணவாயை காலை 9 .00 மணிக்குள் கடக்க வேண்டும் என்பதாலும் நபிதாங்கில் தங்குகின்றோம்.

காலாபானி வரும் வழியில் நேபாள பகுதியில் பல பனி மூடிய சிகரங்களையும், இந்தியப்பகுதியில் ஆதிசேஷன் மற்றும் நாகினி சிகரங்களையும், பல் வேறு நதிகளின் சங்கமங்களையும் கண்டோம். நதியானது முதலில் சிறிய ஓடை போல இருந்தது பல் வேறு ஆறுகள் தங்கள் தண்ரைக் கொண்டு வந்து சேர்ப்பதால் சிறிது சிறிதால அகலமாகி, வேகமும் அதிகமாகி விசுபரூபம் எடுக்கும் அழகைக் கண்டோம்.
வழியெங்கும் நீர் வீழ்ச்சிகள்

இப்போது பார்ப்பவை எல்லாம் அதிக சுந்தரமாக தோன்றியது. அப்பர் பாடிய "கண்டேனவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்" என்பதற்கான விளக்கம் இப்போது தான் புரிந்தது. அம்மையப்பரை தரிசனம் செய்த உற்சாகமும், இறக்கம் என்பதாலும் இறங்கும் போது அதிக சிரமம் தெரியவில்லை.

காலாபானி முகாமும் நாக பர்வதமும்

காலாபானி அடைந்து பாஸ்போர்ட்டில் நாட்டிற்குள் உள்ளே வரும் முத்திரை பெற்றோம்( immigration formalities). பின் இரவு காளி கோவிலில் அருமையான யாத்திரையை கொடுத்த அம்மைக்கும் அப்பருக்கும் பஜனை .

காலாபானி காளி கோவிலில் நன்றி கூற பஜனை
நல்ல தரிசனம் கிடைத்ததின் ஆனந்தத்தை அன்று அனைவரும் வெளிப்படுத்தினர், பின் இரவில் ITBPயினர் விருந்து வழங்கினர், யாத்திரையின் நினைவுச் சின்னமும் வழங்கினர். எங்கள் குழுவினரும் அவர்களுக்கு எங்கள் அன்பின் அடையாளமாக சிறு பரிசுகள் வழங்கினோம்.

இந்த 21ம் நாள் காலாபானியில் சிவசக்திக்கு நன்றி செலுத்திய நாள்.

* * * * * * * *


22ம் நாள் காலாபானியிலிருந்து கூஞ்சி வரை நடைப்பயணம்

அதிகார வினைக ளறுப்பாய் போற்றி


ஆல நிழற்கீ ழமர்ந்தாய் போற்றி


சதுரா சதுரக் குழையாய் போற்றி


சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி


எதிரா வுலக மமைப்பாய் போற்றி


யென்று மீளாவருள் செய்வாய் போற்றி


கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (23)


கூஞ்சிக் கோவில்



சென்ற வழியிலேயே வியாசரின் குகையையும், பைன் மரங்களையும், வெள்ளை மலர்களும், சிவப்பு பழங்களும் கொண்ட உட் ரோஸ் புதர்களையும், எதிர் பக்கத்தில் நேர்த்தியாக நெடிதுயர்ந்து ஒரே வரிசையாக ஒட்டடை குச்சி போல வளர்ந்து அற்புத காட்சி அளித்த நேபாள மலைத்தொடர்களை ரசித்தோம். சிற்றுண்டி வழங்க காத்திருந்த ITBP வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இவ்வாறு இயற்கை அழகை அனுபவித்துக் கொண்டே
கூஞ்சி வந்து சேர்ந்தோம்.



திரும்பி வரும் போது ஆனந்தத்தாலோ அல்லது முற்றிலும் இறங்கு முகம் என்பதாலோ பயணம் அதிக சிரமமாக தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி செலுத்தம் விதமாக திரு தனுஷ்கோடி அவர்கள் அவரது குதிரைக்காரர் வந்திருந்தும் கூட குதிரையில் ஏறவில்லை நடந்தே வந்தார். கூஞ்சியிலும் ITBPயினர் மதியம் விருந்து வழங்கினர்.அன்று இரவு கூஞ்சி கோவிலிலும் அருமையான பஜனை.

2 comments:

Test said...

i have red it completely sir... you have enjoyed your trip and we have enjoyed your blog and snapshots.

S.Muruganandam said...

Its all ShivaSakthi's grace. Thank you logan sir.