கண்ணார் அமுதனே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றியாத்திரையின் முதல் நாள் 09-05-2011 அன்று காலை காத்மாண்டுவிலிருந்து சொகுசு பேருந்து மூலமாக சுமார் 125 கி.மீ பயணம் செய்து நேபாள எல்லை நகரமான கோடரியை மதியம் சென்றடைந்தனர்.
இந்த நகரத்தில் மதிய உணவு உண்டனர், மற்றும் அமெரிக்க டாலர்களை சீன யுவானாக மாற்றிக்கொண்டனர். பின்னர் நட்பு பாலத்தின் வழியாக நடந்து சீனப்பகுதியில் உள்ள ஜாங்கு நகரை அடைந்தனர்.
கோடரி நகரத்தின் எழில் மிகு காட்சி
சீனாவையும் நேபாளத்தையும் இணைக்கும் நட்புப் பாலம்
முன்னரே சொன்னது போல இப்பாலத்தில் வண்டிகள் செல்ல அனுமதியில்லை. சீனப்பகுதியில் சென்ற யாத்திரிகள் தாங்கள் முழு யாத்திரையும் பயணம் செய்யும் டொயோட்டா லேண்ட் குருசியர் வாகனத்தில் பயணம் செய்கின்றனர். ஒரு வண்டியில் நான்கு யாத்திரிகளும் அவர்களுக்கு சேவை செய்யும் சேர்பாவும், வண்டி ஓட்டுனரும் ஆக மொத்தம் ஆறு பேர் பயணம் செய்கின்றனர். சேர்பா யாத்திரிகளின் அனைத்து தேவைகளையும் கவனித்து கொள்கின்றார்.
லேண்ட் குருசியர் வண்டியின் முன் திரு.இரவி அவர்கள்
ஜங்குவிலிருந்து ஜீப் மூலம் சுமார் 25 கி.மீ பயணம் செய்து முதல் நாள் இரவு நைலாமு என்ற இடத்தை அடைந்து அங்கு ஹோட்டலில் தங்குகின்றனர். இரவி கூறிய ஒரு அறிவுரை. நேபாளப் பகுதியில் பண மாற்றம் செய்வதை விட சீனப்பகுதியில் செய்வது லாபகரமானது.
இரவியுடன் பயணம் செய்த யாத்திரிகள்
அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்
திருக்கயிலாயம்
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப்படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி (3)
நற்றுணையாவது நமச்சிவாயவே என்று அறுதியிட்டு கூறிய திருநாவுக்கரச பெருமான் பாடிய இக்கயிலாய பதிகத்தை தினமும் நம்பிக்கையுடன் சிவபெருமானின் முன் திருவிளக்கேற்றி பாராயணம் செய்தால் நிச்சயம் திருக்கயிலை தரிசனமும் மானசரோவர் ஸ்நானமும் திண்ணம் என்பதால் ஒவ்வொரு பதிவிலும் ஒரு பதிகம் இடம்பெறுகின்றது.
யாத்திரை தொடரும்…
No comments:
Post a Comment