Wednesday, February 20, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -4


காத்மாண்டு

கௌரி கட்டம் மற்றும் குஹ்யேஸ்வரி ஆலய தரிசனம் 


பசுபதிநாதரை அற்புதமாக தரிசனம் செய்துவிட்டு ஐயா உன்னுடைய திருக்கயிலாய தரிசனம் அருமையாக சித்திக்க வேண்டும் கிரி வலத்தையும் மேற்கொள்ளும் பாக்கியம் தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அடுத்து ஐயனின் வாம பாகத்தில் இருக்கும் அம்மனை . கௌரியை, உமையை, மலை அரசன் பொற்பாவையை தரிசிக்க சென்றோம்.  



குஹ்யேஸ்வரி செல்லும் பாதை

இந்த சிறுமி எடிஅஹர்வாலும் (Eti  Agrawal) எங்களுடன் திருக்கயிலாய யாத்திரை வந்திருந்தாள்.  உடன் அவளின் தந்தை அமித் அஹர்வால் அவர்கள்


குஹ்யேஸ்வரி என்னும் அன்னையின் சக்தி பீடம் இங்கு நேபாளத்தில் உள்ளது, அடுத்து  அங்குதான் நாங்கள் சென்றோம். பாக்மதி நதியின் மறு கரையில் இந்த சக்திபீடம் அமைந்துள்ளது.  இத்தலத்தில் அன்னியின் மர்ம ஸ்தானம் விழுந்ததாக ஐதீகம். எனவே  இரகசிய ஈஸ்வரி அதாவது குஹ்யேஸ்வரி என்று  வணங்கப்படுகின்றாள்.   



கௌரி கட்டம் 

பசுபதிநாத்திலிருந்து பாக்மதி நதியை கடந்து செல்ல நடைபாதை உள்ளது அது வழியாக நடந்து  சென்றோம். செல்லும் வழியில் கௌரி கட்டம் என்னும்  இடம் பார்வதி தேவி பாக்மதி ஆற்றில் குளித்த இடம். அங்கு  ஒரு கோயில் அமைத்துள்ளனர். இக்கோவிலில் மஹா விஷ்ணு சிலை அமைத்துள்ளனர் மர்றும் கரையில் செந்தூரம் பூசிய ஹனுமன் சிலையும் உள்ளது.   கீழிறங்கி சென்று அன்னையை வணங்குபவர் திரு. சுதார் அவர்கள். இவர்தான் இந்த யாத்திரைக்கு அச்சாணி எனலாம். எல்லா ஏற்பாடுகளையும் செய்து யாத்திரை வெற்றிகரமாக முடிய இவரே முக்கிய காரண கர்த்தா ஆவார்.   


கௌரி கட்ட மஹா விஷ்ணு


கௌரி கட்ட ஹனுமன் 






பாக்மதி ஆறு 

பாக்மதி ஆறும் இங்கு நம்முடைய கூவம் ஆறு போல ஆகிவிட்டது.  சாக்கடையாகத்தான் ஓடுகின்றது. மனித தொகை அதிகமாவதால் இவ்வாறு ஆறுகள் எல்லாம் மாசடைகின்றன.  இப்படத்தை எடுத்தவர் அடியேனின் நண்பர் திரு.சுந்தர் அவர்கள். மிக சிறந்த  புகைப்பட கலைஞர் அவர்கள். பிறப்பால் கிருத்துவர், ஆனால் எல்லா மதமும் சம்மதமே  என்று வாழ்பவர். இவர் அடியேனுடன் திருக்கயிலாய யாத்திரைக்கு வந்தார் என்பதில் இருந்து இவரின் இயல்பை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.  குறிப்பாக புத்த மதத்தைப் பற்றி இவருக்கு தெரியும் விவரங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன.   இத்தொடரில் வரும் அநேக புகைப்படங்கள் இவரின் கை வண்ணம்.  




குஹ்யேஸ்வரி ஆலய கருட முகப்பு 


நேபாளத்தில் உள்ள அனைத்துக்கோவில்கள் போலவே குஹ்யேஸ்வரி ஆலயத்தின் முகப்பிலும், சிம்மம், கணேசர், முருகர், கண்கள், சூரியன், சந்திரன்  ஆகியவை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.  முன் வாயிலின் பின் பக்கம் சப்த மாதாக்கள் சிலா ரூபத்தில் அமைத்துள்ளனர்.
 

இத்திருக்கோவிலை 17ம் நூற்றாண்டில் பிரதாப மல்லன் என்னும்  அரசன் கட்டினான். திருக்கோவில் உயரமான இதத்தில் அமைந்துள்ளது சுமார் 20 படிகள் ஏறித்தான் சன்னதியை அடைய முடியும். கோவிலைச்  சுற்றி உயரமான மதில் உள்ளது . திருக்கோவிலுக்கு அருகில் பல சத்திரங்கள் உள்ளன. அம்பாளின் சன்னதி பசுபதி நாதர் ஆலயம் போல இரண்டடுக்கு  பகோடா பாணியில் அமைந்துள்ளது. இக்கூரைகளுக்கும் தங்க ஓடுகள் வேதப்பட்டுள்ளன. சக்தியின் ஆலயம் என்பதால் குண்டலி ரூபமான நான்கு நாகங்கள் கலசத்தை தாங்குவது போல அமைத்துள்ளனர். சன்னதியில் அம்மனின் சிலை எதுவும் இல்லை முட்டை வடிவில் அம்மனின் உடல் பகுதி விழுந்த இடத்தை நாம் அம்மனாக வணங்குகின்றோம். அம்மனுக்கு எதிரில் பைரவரின் சிறு சன்னதியும் உள்ளது.அன்னையை போற்றும் லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தில்  இந்த நாமங்களைக் கூறி வணங்கினோம்

 ஓம் குஹ்யாயை நம:  - மிக இரகசியமானவள்

ஓம் குஹ்ய -ரூபிண்யை நம: -  ~ரகசிய ரூபமுள்ளவள் (அதனால்தான் அம்பாளை அறிபவர் அரிதாகின்றனர்) 

. இன்னும் இந்த வருடம்  பனி முழுவதுமாக உருகவில்லை என்பதால் இது வரை கிரி வலம் ஆரம்பிக்கவில்லை, நாங்கள் திருக்கயிலாயத்தை அடைவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ளன. அதற்குள் கிரி வலம் ஆரம்பிக்க வேண்டும் என்று அன்னையிடம்,    தாயே திருக்கயிலையில் உன் தரிசனம் சித்திக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் ஏனென்றால் கிரி வலம் சென்றால்தான் அன்னிஅயின் டோல்மா கணவாய் செல்ல முடியும். 




குஹ்யேஸ்வரி அம்மன் ஆலய எழில் முகப்பு 

இன்றைய தினம் முகூர்த்தநாள் போல உள்ளது, ஏனென்றால் பல புதிதாக திருமணம் ஆன தம்பதிகளை அன்னையின் ஆலயத்திற்கு அருகில் கண்டோம். 


ஒர் புதுமணத் தம்பதிகள் 



குஹ்யேஸ்வரி அம்மன் ஆலய மண்டபத்தில் எங்கள் குழுவினர்




 சப்த மாதாக்கள்
( படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)



அர்ச்சனைப் பொருட்கள் 

அம்மனை திவ்யமாக சேவித்து விட்டு வேறு வழியாக மலையேறி கோகர்நாத் ஆலய வளாகம்  வழியாக திரும்பி வந்தோம். இவ்வளாகத்தில் பார்க்கும் இடமெல்லாம்  சிவலிங்கம். மொத்தம் 11 சிறு  சன்னதிகள் உள்ளன. இவை அனைத்திலும் சிவ லிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நந்தியெம்பெருமானும் இயனின் முன்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.  பிரமாண்ட திரி சூலம் மற்றும்  காண்டா மணி  ஆகியவற்றையும் தரிசனம் செய்தோம்.   



பெரிய காண்டா மணி 


அருமையான வேலைப்பாடுடன் கூடிய கதவம் 


 குஹ்யேச்வரி ஆலயத்தில் இருந்து 
கோகர்நாத் ஆலய வளாகம் செல்லும் வழி









கோகர்நாத ஆலய வளாகம் 



இவ்வாலய வளாகத்தில் இருந்து பசுபதிநாதரின் விமானத்தையும் அன்னை குஹ்யேஸ்வரி ஆலயத்தின் விமானங்களையும் அருமையாக தரிசனம் செய்யலாம்.  இனி அடுத்து எங்கு சென்றோம் என்பதை அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே.


 திருநாவுக்கரசர்  தேவாரம்

திருக்கயிலாயம்



கடுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
எடுத்தலு மங்கை யஞ்ச விறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற நோவது மலறி யிட்டான்
மடித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.(4)

பொருள் :
கோபம் கொண்ட இராவணன் கண்கள் சிவக்கக் கயிலை நன்மலையை ஓடி எடுத்த அளவில் பார்வதி அஞ்ச , எம் பெருமான் அதனை நோக்கி முறுவலித்து ஒருகணநேரம் தன் கால் விரலை ஊன்றிய அவ்வளவில் இராவணன் உடல் நொந்து கதறி விட்டான் . கால்விரலை மடித்துச் சிறிது அழுந்த ஊன்றியிருந்தானாகில் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .



தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

  யாத்திரை வளரும்.......

No comments: