Sunday, March 24, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -5


காத்மாண்டு

ஸ்வயம்புநாத் புத்த ஸ்தூபி

காத்மாண்டு நகரத்தில் எண்ணற்ற ஸ்தூபிகள் இருந்தாலும்  இரு ஸ்தூபிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை அவை  ஸ்வயம்புநாத் மற்றும் பௌத்நாத் ஆகும்.   இவற்றுக்கு எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர்.  எனவே நாங்களும்  அம்மையைப்பரை தரிசித்து விட்டு யாத்திரை முழுமையாகவும் சரியாகவும் நடந்து முடிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அடுத்து  ஸ்வயம்புநாத் சென்றோம் . இந்த ஸ்தூபி ஒரு மலையின் மேல் அமைந்துள்ளது. இதில் நான்கு பக்கமும் வரையப்பட்டுள்ள புத்தரின் கண்கள் எந்நேரமும் காத்மாண்டு நகரத்தை கண்காணித்துக்கொண்டு இருப்பது போல உள்ளது.   குரங்குகள் நிறைய இருப்பதால் இது குரங்குக் கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. 



கிழக்கில்  உள்ள படிகட்டுகள்


ஸ்வயம்புநாத்தின்  சிறு  மாதிரி


ஸ்தூபி என்பது புத்தரின் எதாவது நினைவுப்பொருளை வைத்து அரை கோள வடிவில் கட்டப்படும் செங்கல் கட்டிடம் ஆகும். இந்த ஸ்தூபியை Iகி.பி 460ல் மானதேவன் என்ற அரசன் கட்ட ஆரம்பித்தான். 13ம் நூற்றாண்டில் இந்து ஸ்தூபம் ஒரு  புகழ் பெற்ற பிரார்த்தணை தலமாக இருந்துள்ளது. அசோகர்  0 இந்த ஸ்தூபிக்கு வந்து வழிபட்டுவிட்டு சென்றிருக்கிறார்.  பின்னர் முகலாயர் காலத்தில் இது சேதம் அடைந்தது. 17ம் நூற்றாண்டில்  பிரதாப மல்லன் என்ற அரசர் இந்த ஸ்தூபியை புணருத்தாராணம் செய்து தற்போது  உள்ள உன்னத நிலைக்குக் கொண்டு வந்தார்.  தற்போது கிழக்குப் பக்கம் உள்ள படிகளையும் அவர்தான் கட்டினார்.  

இந்த ஸ்தூபியை  இந்தப் படிகளில் ஏறி வந்தும் அடையலாம்  அல்லது வண்டிகள் மூலாக நேராகவும் வந்து சேரலாம். படிகளில் ஏறும் சுகமே  தனி. படிகளின் ஆரம்பத்தில் கணேசரும்  முருகரையும் தரிசிக்கலாம். வரும் வழியில் புத்தரின் பிறப்பை விளக்கும் அருமையான கற்சிலைகளை கண்டு களிக்கலாம். வழியில் குரங்களிடமிருந்து தங்கள் பொருட்களை பத்திரமாக காத்துக்கொள்ள வேண்டியுள்ளது.  படிகளில் ஏறிமேலே வந்தவுடன் தியான புத்தர்களின் வாகனங்களான கருடன், சிம்மம், யாணை, குதிரை மற்றும் மயிலை காணலாம்.  ஒரு குளத்தின் நடுவே புத்தரின் அருமையான சிலையை    யும்  காணலாம். மேற்கு பக்கத்திலிருந்து வாகனங்களின் மூலம் மேலே செல்லும் போது பல அழகிய புத்த விகாரங்களைக் காணலாம். 


குளத்தில் அழகிய புத்தர் சிலை

ஸ்தூபத்தின் நுழைவு வாயிலின் அருகிலே  ஸ்வயும்புநாத்தின் இரு சிறு மாதிரிகள் உள்ளன. பிரார்த்தணை நிறைவேறியதற்காக  பக்தர்கள் கட்டியது போல் உள்ளது .இந்த ஸ்தூப வளாகமெங்கும் கல்லாலும் சுதையாலும் ஆன பல சிறு ஸ்தூபங்களை  காணலாம். 

ஸ்வயம்புநாத் ஸ்தூபி


புத்தரின் திருவிழிகள்


 ஆதி காலத்தில் ஸ்தூபிகள் நினைவிடங்களாகவே இருந்தன. காலம் செல்ல செல்ல  சவை புத்த் மதத்தின் கோட்பாடுகளை முழுதும் விளக்குவனவாக உள்ளன.  ஸ்தூபங்கள் பொதுவாக இவ்வாறு அமைக்கப்படுகின்றன. அடித்தளம் சதுர வடிவ மேடை. அதன் மேல் கும்பம் என்று அழைக்கப்படும்  அரைக்கோள செங்கல் கட்டிடம். இதில்தான் புத்தரின் நினைவுப்பொருட்கள் வைக்கப்படுகின்றன. பொதுவாக இந்த அரைக்கோளங்கள் சுண்ணாம்பு பூசப்பட்டவையாக உள்ளன.  இது பஞ்ச பூதங்களில் நிலம், நீர், அக்னி மற்றும் வாயு ஆகிய நான்கு பூதங்களை உணர்த்துகின்றது.    அதன் மேலே  உள்ள சதுர பட்டையின் நான்கு பக்கமும் புத்தரின் விழிகள் வரையப்பட்டுள்ளன. இது ஹர்மிகா என்றழைக்கப்படுகின்றது.  அத்திருவிழிகளினால் அவர் நான்கு புறங்களிலும் காத்மாண்டு நகரை காத்துக்கொண்டிருப்பதாக ஐதீகம்.  கண்களுக்கு கீழே மூக்குப்போல வரையப்பட்டிருப்பது மூக்கு அல்ல அது நேபாள எண் ஒன்று ஆகும். அனைவரும் ஒன்று என்பதை  இது குறிக்கின்றது. புத்தரின் ஞானக் கண்ணான மூன்றாவது  கண்ணையும் காணலாம்.   இதன் மேல் 13 வளையங்களைக் காணலாம் ஒருவர் நிர்வாணத்தை அடைய கடக்க வேண்டிய 13  நிலைகளை இந்த வளையங்கள் குறிக்கின்றன. இவ்வளையங்கள் ஆகாயத்தை குறிக்கின்றது.  மேலே உள்ள தங்கக்குடை அந்த உன்னத நிலையையாம்  நிர்வாணத்தை குறிக்கின்றது.   மேலிருந்து கட்டப்பட்டிருக்கும் கொடிகளில் ஐந்து நிறங்கள் பஞ்ச பூதத்தைக் குறிக்கின்றன. இவைகளில் மந்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. காற்றில் இவை அந்த மந்திர சக்திகளை கொண்டு செல்வதாக ஐதீகம்.     



 உன்னத நிலையைக் குறிக்கும் தங்கக்குடை

கோஷ்டத்தில் தியான புத்தர்கள்


அரைக்கோள கும்பத்தின் நான்கு திசைகளிலும் கோஷ்டத்தில் தியான புத்தர்கள்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் ஐந்து தியான புத்தர்கள் உள்ளனர்.  வடக்கு நோக்கியுள்ளவர் அமோக சித்தர் இவர் அபய ஹஸ்தத்துடன் காட்சி அளிக்கின்றார்.  இவரது நிறம் பச்சை. தேவி பச்சை தாரா. இவரது வாகனம் கருடன்.  போதி சத்துவர்  விஸ்வபாணி.  இவர் வாயுவைக் குறிக்கின்றார்.

  ஸ்தூபியை வலம் வரும் போது அடுத்து நாம் தரிசிக்கும் தியான புத்தர்  அக்ஷோப்யர் இவர் கிழக்கு நோக்கி உள்ளார். இவரது நிறம் நீலம். தேவி லோசனா. போதி சத்துவர்    வஜ்ர பாணி. இவரது வலக் கர உள்ளங்கை  உள் நோக்கியவாறு பூமியை  தொட்டவாறு இருக்கும் இதன் மூலம் இவர்  மாரனை(யமன்) அடக்குவதாக ஐதீகம்.  இவர் நீரின் அம்சம். இவரது வாகனம் யாணை.


 தியான புத்தர்கள் 

 அடுத்து  தெற்கு நோக்கி இருப்பவர் இரத்ன சம்பவர்  இவரது பொன்/மஞ்சள்.  இவரது வலக்கர  உள்ளங்கை வெளி நோக்கியவாறு பூமியை தொட்ட நிலையில் உள்ளது.  இவரது தேவி மாமாகி. போதி சத்துவர் இரத்னபாணி. இவரது  வாகனம் குதிரை.  இவர்  பூமியின் அம்சம். 

 மேற்கு நோக்கி இருப்பவர் அமிதாபர். இவரது நிறம் சிவப்பு. தேவி பந்தரா. போதி சத்துவர் அவலோகிதேஸ்வரர்.   பத்ம முத்திரை. இவரது வாகனம் மயில். இவர் அக்னியின் அம்சமாக விளங்குகிறார். கரத்தில் சிந்தாமணியை தாங்கியுள்ளார். 

ஐந்தாவத்து தியான புத்தர் வைரோசனர்.  இவரது நிறம் வெள்ளை. இவரது கரத்தில் கால சக்க்ரம் உள்ளது. இவர் சின் முத்திரை கொண்டு  தர்மத்தை போதிக்கும் கோலத்தில் அருள் பாலிக்கின்றார்.  இவரது சக்தி வெள்ளை தாரா. போதி சத்துவர்  சமந்தபத்ரர். இவரது வாகனம்  சிம்மம். இவர் ஆகாயத்தின் அம்சம். மற்ற நால்வரும் நான்கு திசைகளை பார்த்து அமர்ந்திருக்க இவர் நடு நாயகமாக இருந்து அருள் பாலிக்கின்றார்.  எனவே இவர் எப்போதும் மேல் நோக்கியவாறு  ஸ்துபத்தின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார் எனவே இவரை காண்பது அரிது . ஆனால் பொதுவாக எனவே இவரை தென் கிழக்கு நோக்கியவாறு பிரதிஷ்டை செய்வார்கள் ஆனால்  இங்கு ஸ்வயம்புநாத்தில் இவர் கிழக்கு நோக்கி அக்ஷ்யோபர்துக்கு அருகிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். 
( நமக்கு சிவ பெருமானின் ஐந்து முகங்கள் போல தோன்றுகிறது அல்லவா?) 


 கோஷ்டத்தில் அக்ஷோபயர் மற்றும் வைரோசனர்



சிறு ஸ்தூபிகள் 



தற்போதைய காலத்து போதி சத்துவ ர்லோகிதேஸ்வரர்

ஸ்வயம்புநாத்தில்  கோம்பா(Gompa) எனப்பதும் ஒரு திபெத்திய  கோவில் உள்ளது அதில் ஆறு அடி உயர தற்காலத்து தியான புத்தர் அமிதாபரின்  போதி சத்துவர் அவலோகிதேஸ்வரர் அருள் பாலிக்கின்றார். பொன்னிற வண்ணத்தில் அமைதி ததும்பும் திருமுகத்துடன் இவரை தரிசிப்பதே ஒரு தனி அழகு. தினமும் மாலை நான்கு மணியளவில் இவருக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. 


புத்தர்கள் எப்போதும் ஸ்தூபிகளை வலம் வருகின்றனர் அவ்வாறு வலம் வரும் போது  அங்கு ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ள பிரார்த்தனை உருளைகளை தங்களின் கரங்களினால் சுற்றுகின்றனர்.  இந்த பிரார்த்தனை உருளைகளில் " ஒம் மணி பத்மே ஹம்" என்னும் புத்த மந்திரம் உள்ளது. இந்த பிரார்த்தனை  மந்திரத்தை சொல்லிக்கொண்டே உருளைகளை சுற்றிக் கொண்டே ஸ்தூபத்தை வலம் வருகின்றனர்.  இந்த மந்திரத்தின் பொருள் "தாமரையில் அமர்ந்து அருள் பாலிக்கும் சிந்தாமணியை போற்றுகின்றோம் " என்பதாகும்.  நாம் திருக்கைலாய வலம் வரும் போது பல இடங்களில் இந்த மந்திரத்தை காணலாம்.

 டோர்ஜே என்ப்படும் வஜ்ராயுதம்  

 பிரம்மாண்ட மணி

 பிரதாப மல்லன்  படிகளைக் கட்டிய போது இது கோயில்கயும் சிம்மத்தையும் வஜ்ராயுதத்தையு நிறுவினார்.நாம் படிகளில் ஏறி வந்தவுடன் ஸ்தூபத்தின் கிழக்கில் இந்த  வஜ்ராயுதத்தை காண்கிறோம்.  அருகிலேயே பிரம்மாண்ட மணியும் உள்ளது. இந்த வஜ்ராயுதம்  ஆண் சக்தி என்றால் மணி பெண்ணின் ஞானம் என்பது ஐதீகம். இந்த வஜ்ராயுதத்தின் பீடத்தில் திபெத்திய வருடங்களை குறிக்கும் பன்னிரண்டு மிருகங்களான பாம்பு, குதிரை, ஆடு,குரங்கு,கீரி, நாய்,பன்றி,எலி,எருது,புலி,முயல் மற்றும் ட்ரேகன் ஆகியவற்றைக் காணலாம்.  



வஜ்ராயுத்தின் இரு மருங்கும் இந்திய சிகார அமைப்பிலான இரு கோவில்கள் உள்ளன.  இவாஈ பிரதபுர சிகாரா மற்றும் அனந்தபுர சிகாரா ஆகும். நாங்கள் சென்ற சமயம் இவற்றை புணருத்தாரணம் செய்து கொண்டிருந்தனர். 

ஹரிதி ஆலயம்  முன்னழகு

நம் ஊரில் மாரியம்மன் போல இவர்களுக்கு ஹரிதி தேவி . இவள்  அம்மையிலிருந்து காப்பதாக ஐதீகம். இந்த அம்மனுக்கு நேபாள பகோடா அமைப்பில் இரு தளங்கள் கொண்ட பொற்கோவில் ஒன்று அருமையாக அமைக்கப்படுள்ளது. இதன் அருகில் புத்த அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. அதில் புத்தர் சம்பந்தபட்ட பல பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.  அவற்றும் இரண்டு சயன புத்தர்கள் அருமை. நமது கோவில்களில் விளக்கேற்றுவது போலவே இவர்களும் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.   



எங்களுடன் யாத்திரை செய்த கனி 
அவர்கள் விளக்கேறும் காட்சி

                                                          ஹரிதி ஆலயம் பின்னழகு 



ஸ்வயம்புநாத் மலை மேல் அமைந்துள்ளதால் அங்கிருந்து காத்மாண்டு நகரத்தின் அற்புதமான  காட்சி கிடைக்கின்றது. குறிப்பாக அந்தி மயங்கும் நேரத்தில் ஆரஞ்சு வர்ண  சூரிய ஒளியுலும், விளக்குகள் போட்டவுடனும் கிடைக்கும் காட்சி மிகவும் அற்புதம். அது போலவே  முழு நிலவு நாளில் சந்திரனின் ஓளியில் இந்த நகரை மேலிருந்து பார்ப்பதே ஒரு தனி அழகுதான். ஸ்வயம்புநாத்தில் பல கடைகள் உள்ளன அவைகளில் ருத்திக்ராஷம், ஸ்படிக மாலைகள், பவள, முத்து மாலைகள் மற்றும் அற்புதமான புத்த கைவினைப்பொருட்கள். புத்தர் சிலைகள், தாரா தேவி சிலைகள்  ஆகியவற்றினை வாங்கலாம்.    எதாவது வேண்டுமென்றால் ஞாபகார்த்த்திற்காக வாங்கிக்கொள்ளலாம்.   காத்மாண்டு நகரம் முழுவதும் இது போன்ற பல கடைகள் உள்ளன.  

ஸ்வயம்புநாத்தில் எங்கள் குழுவினர்
( பின் புலத்தில் காத்மாண்டு நகரை காண்கின்றீர்கள்)


 திருநாவுக்கரசர்  தேவாரம்

திருக்கயிலாயம்



கன்றித்தன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
வென்றித்தன் கைத்த லத்தா லெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தா னக்கு நாத னூன்றலு நகழ வீழ்ந்தான்
மன்றித்தா னூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொருள் : வெகுண்டு கண் சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடி இராவணன் பல வெற்றிகளைப் பெற்ற தன் கைகளால் எடுத்தலும் பார்வதி அஞ்ச எம் பெருமான் நன்கு சிரித்துத் தன் கால் விரலை ஊன்றிய அளவில் அவன் துன்புற்று வீழ்ந்தான் . அவனைத் தண்டிக்கக்கருதி விரலைப் பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .   .   

No comments: