நைலாமிலிருந்து பழைய ட்ராங்போ பயணம்
புத்த பிக்ஷு மில்ரெபாவின் குகை
ஆரம்பத்தில் செழுமை
ஒரு பசுமை கிராமம்
கிராமத்தின் ஒரு திபெத்திய வீடு
(அமீத் அகர்வால் மற்றும் சுதார்)
கிராமத்தின் ஒரு திபெத்திய சிறுமி ஸ்டிக்கர் பொட்டுடன்
போக்குவரத்தே இல்லாத பாதை
செல்ல செல்ல வெறுமை
வெற்று மலைகள்
மலையின் மாறும் முகங்கள்
நடு நடுவேஎங்காவது ஒரு கிராமம்
இன்னும் மாறும் மலைகள்
எவ்வளவு நேரம்தான் வெற்று மலைகளைக்
காண்பது என்று தூங்கும் நாங்கள்
முதலில் படங்களின் தலைப்பைப் படித்தால் நாங்கள் இன்றைய தினம் எவ்வாறு சுமார் 375கி.மீ தூரம் பயணம் செய்தோம், என்ன என்ன பார்த்தோம் என்பது விளங்கும்.
இந்த
யாத்திரையின் ஐந்தாம் நாள் காலை (02-06-2012) எல்லோரும் தயார் ஆகி காத்துக் கொண்டு இருந்தோம்.
சீன வழிகாட்டியும், வண்டி ஓட்டுநரும் வர
காலதாமதமானது. என்ன நடந்தது என்றால் டில்லி மற்றும் காத்மாண்டுவில் உள்ள சிரேஷ்டா
நிறுவனத்தினர் எங்களிடமிருந்து பணம் பெற்று அதில் ஒரு பகுதியை இந்த
சேர்ப்பாகளுக்கு அளித்து விட்டனர், எங்களை காத்மாண்டுவில் இருந்து அழைத்துச்
சென்று காத்மாண்டு வரைகொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையது. எனவே
அவர்கள் வாடகைக்கு அமர்த்திய சீன வழிகாட்டி ஒரே சமயம் இரண்டு குழுக்களை அழைத்து
சென்றார். ( சீனாவில் பயணம் செய்யும் போது சீன வழிகாட்டி அவசியம்). மேலும் அவர்
மற்ற குழுவினருடன் தங்கிக்கொண்டார் மற்றும் பயணம் செய்தார், அவர்கள் ஜீப்பில்
வந்தனர் அதனால் இந்த குளறுபடி. உண்மையில் அவர் ஒன்றும் வழிகாட்டவில்லை
பேருக்குத்தான் உடன் வந்தார்.
திட்டப்படி
இன்றைய தினம் சுமார் 8 மணி நேரம, 265 கி.மீ தூரம் பயணம் செய்து, சாகா(4580 மீ) என்னும்
நகரை அடைந்து அங்கு தங்கியிருக்க வேண்டும். சாகா செல்லும் வழியில் லா லுங் லா
கணவாய் (5500 மீ) உள்ளது மற்றும் சாகாவிற்கு அருகில் மானசரோவர் ஏரியிலிருந்து உற்பத்தியாகி ஓடி வருகின்ற
பிரம்மபுத்ரா நதியையும் கடக்கிறோம். ஆனால் என்ன மாற்றங்கள் நடந்தன என்பதை அறிந்து கொள்ள மேலே
படியுங்கள்.
நைலாமிலிருந்து
சிறிது தூரத்தில் மில்ரெபாவினுடைய தியான குகை உள்ளது, நாங்கள் வரும் போது
பார்த்துக் கொள்ளலாம் என்று முன்னே சென்று விட்டோம். பாதை அருமையாக அமைத்து உள்ளார்கள். இன்றைய தினம் கிளம்பிய போது முதலில் பசுமையான
கிராமங்கள் கண்ணில் பட்டன. அப்படி ஒரு கிராமத்தில் சிறிது நேரம் நின்றோம். அங்குள்ள குழந்தைகளுக்கு சாக்லெட் வழங்கினோம். திபெத்திய சிறுமிகள் நம்முடைய ஸ்டிக்கர் பொட்டுகளை விரும்புகின்றனர். எங்களுடன் வந்த தாய்மார்கள் சிலர் தங்களிடமிருந்த பொட்டை அவர்களுக்கு வழங்கினர். அப்படி ஒரு சிறுமியின் புகைப்படம் மேலே உள்ளது.
பின்னர் நேரம் செல்ல செல்ல உயரம் அதிகமாகிக் கொண்டே வருவதால் பசுமை குறைந்து வெறுமை அதிகமாகி
விட்டது, தூர தூரமாக சிறு கிராமங்கள், பாதையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய வரை
வெறும் மணல் வெளி அதற்கப்புறம் மலை
மற்றும் பனி மூடிய சிகரங்கள், ஆங்காங்கே யாக் மற்றும் செம்மறி ஆடுகள் மணல்
வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அவ்வளவுதான் வேறு எந்த மனித நடமாட்டமும் இல்லை.
பாதையிலும் அதிக போக்குவரத்து இல்லை எப்போதவது ஏதாவது ஒரு வண்டி எதிரே வரும். பேருந்தில் வேகக் கட்டுப்பாடு கருவி
பொருத்தியுள்ளனர், வண்டியின் வேகம் 80 மைல் தாண்டினால் ஒலி
எழுப்பி எச்சரிக்கின்றது. பாதையின் இரு மருங்கிலும் மின் கம்பங்கள் அமைத்துள்ளதை
கவனித்தோம். மேலும் அனைத்து கிராமங்களிலும் சூரிய ஓளி கம்பங்கள் (Solar panels)
அமைத்திருக்கின்றனர். இந்த அத்துவான மலை பிரதேசத்தில் எதற்காக இவ்வளவு அருமையாக
கட்டமைப்பை அதிகப்படுத்தியுள்ளனர் என்பது புரியவில்லை, ஆனால் திருக்கயிலாயம்
செல்லும் பக்தர்களுக்கு இந்தப் பாதையும் கட்டமைப்பும் ஒரு வரப்பிரசாதம் என்பதில்
ஐயமில்லை. வெறும் மலைகளையேப் பார்த்துக்கொண்டு வருவதால் போரடித்து அனைவரும்
உறங்கத் துவங்கினர். இவ்வாறு சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்த பின் லா
லுங் லா கணவாயை அடைந்தோம்.
****************************************
சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பாசுரம்
எம்பிரான் தோழர் சுந்தரரின் தோழர் சேரமான் பெருமாள்
( இவரும் சுந்தரருடன் திருக்கயிலாயம் ஏகினார்)
( இவரும் சுந்தரருடன் திருக்கயிலாயம் ஏகினார்)
திருக்கயிலாய மலையை எம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் "நொடித்தான் மலை" என்று போற்றிப் பாடியுள்ளார். நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும்( நொடித்தல்- அழித்தல்). அழித்தல் தொழிலையும் உடைய உருத்திரமூர்த்தி ரூபமாக ஐயன் எழுந்தருளியிருப்பதாலும் நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது.
திருமயிலையில் ஆடி சுவாதியன்று சுந்தரர் திருக்கயிலாயம் செல்லும் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அதைக் காண இங்கு செல்லுங்கள்
மண்ணுல கிற்பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறுதல் தொண்ட னேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர்கள் விரும் பவெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித் தான்மலை உத்தமனே (5)
பொருள்: மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்து உம்மை பாடுகின்ற பழவடியார்கள், பின்பு பொன்னுலகத்தைப் பெறுதலாகிய பேற்றை இன்று அடியேன் நேரில் கண்டேன் என்று தன்பால் வந்து சொல்லுமாறு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தேவரும் கண்டு விருப்பங் கொள்ள. என் உடலை வெள்ளை யானையின் மேல் காணச் செய்தான். அவன் திருவருள்தான் என்னே!
தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க
யாத்திரை தொடரும்................
2 comments:
//இந்த அத்துவான மலை பிரதேசத்தில் எதற்காக இவ்வளவு அருமையாக கட்டமைப்பை அதிகப்படுத்தியுள்ளனர் என்பது புரியவில்லை,//
முழுக்க முழுக்க இராணுவ பயன்பாடு கருதிதான்... தரைவழி மார்க்கமாகவே மிக விரைவாக கனரக வாகனங்கள் திபெத் எல்லையை அடைவது சாத்தியம். எதற்கும் தயார் என்கிற நிலை.
அதுமட்டுமல்ல.. திபெத்தியர்கள் வசித்த இடங்களில் எல்லாம் சீனர்களை குடியேற்றிக்கொண்டு இருக்கின்றனர். சூரியஒளி வசதி எல்லாம் இதற்காகத்தான்... எல்லாம் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது :)
அருமையான கணிப்பு சிவா. . வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி
Post a Comment