முக்கண் முதல்வரின் முதல் தரிசனம்
ஹோரேவை நெருங்கும் போது முதல் தரிசனம்
அம்மையப்பரின் அற்புத தரிசனம்
ஐயனைக் கண்ட ஆனந்தத்தில் பறவை போல் பறந்தோம்
ஆனந்தக் கூத்தாடினோம்
அடி விழுந்து வணங்கினோம்
நின்றும் கிடந்தும் இருந்தும் வணங்கினோம்
( C.K. வைஷ்ணவ் தம்பதிகள்)
ஆனந்தக் கண்ணீர் வடித்தோம்
(பின் புலத்தில் குர்லா மாந்தாதா மலைச் சிகரங்களையும்,
மானசரோவர் ஏரியையும் காண்கிறீர்கள்)
அன்னபூரணி அன்னமும் பாலித்தாள்
(சேர்பா ரஞ்சித், சுதார், சேர்பா சோனம்
எடி அகர்வால், ஸ்வாதி அகர்வால்)
சகோதர சகோதரி யயாங் பாண்டே மற்றும்
நிஷ்டா பாண்டே ஸ்வாதி அவர்களுடன்
குடும்பம் குடும்பமாக வணங்கினார்கள்
(ரமன், சதிஷ், கைலாஷ் கௌசிக்)
தம்பதிகளாக சேவித்தார்கள்
விஜய் குமார்- ரஷ்மி மஹாஜன்
பறவைகளுக்கு அன்னம் பாலித்தோம்
அனைவரும் ஒன்றாக கூடி கிரிவலமும் சித்திக்க வேண்டும்
என்று மனதார இறைஞ்சினோம்
ஆனந்தத்தில் வானத்தில் மிதந்தோம்
பேருந்தின் முன்னர் நிஷ்டா பாண்டே,
அமீத் அஹர்வால்
கட்டிட வேலைகள் நடைபெறுகின்றன |
இவ்வாறு மலை பாலைவனத்தில் பயணம் செய்து மாயும் லா கணவாயைக்
(5200 மீ) கடந்து மதிய வேளைக்கு
மானசரோவரின் வட கரையில் உள்ள ஹோரே (Hore) திபெத்தில் ஹோர்ச்சூ என்னும்
கிராமத்திற்கு வந்தோம். ஹோரேவை நெருங்கும் போதே ஐயனின் முதல் தரிசனம் கிட்டியது அனைவருக்கும் ஐயனின் தரிசனம் பாருங்கள் என்று கூறினோம். மேக மூட்டம் எங்கும் இல்லை
வானம் நிர்மலமாக இருந்தது, ஆனால் பனி காற்றில் இருந்ததால் சூரிய ஒளி பிரகாசமாக இல்லாததால், மங்கலாக இருந்தது. எதற்காக
இவ்வளவு சிரமம் எடுத்து வந்தோமோ அந்த எண்ணம் அவனருளால் நிறைவேறியது. ஆம் அந்த
முக்கண் முதல்வரின் முதல் தரிசனம் திவ்யமாக கிட்டியது.
முதலில் தரிசனம் தந்த அம்மையப்பருக்கு அடி
வீழ்ந்து வணக்கம் செய்தோம். ஆனந்தக் கூத்தாடினோம், அப்படியே பறவைகள் போல வானத்தில்
மிதந்தோம். ஆனந்த கண்ணீர் வடித்தோம். நின்றும் இடந்தும் கிடந்தும் அமையப்பரை வணங்கி நன்றி செலுத்தினோம். அந்த ஆனந்தத்தை
விவரிக்க வார்த்தைகளே இல்லை. சென்ற தடவை அடியேன் யாத்திரை செய்த போது இருந்த ஒரே
குறையான முதல் தரிசனத்தை இந்த யாத்திரையின் போது தந்தருளிய தாயினும் தயாவான தத்துவனை
கண்ணுதலானை, காமகோபனை, ஆணோ பெண்ணோ அலியோ என்று யாரும் அறியா சிவனை, உண்ணா முலை
உமையாளொடு உடனாகிய அண்ணாமலை அண்ணலை, சிவபுராணம் பாடி வணங்கினோம். மற்றவர்கள் அனைவருக்கும்
இது தாம் முதல் யாத்திரை அவர்கள் அனைவரும் அடியேனும் அருளாளா, அய்யா, அணங்கின்
மணவாளா, ஆனந்த கூத்தா இது போலவே உன் கிரி வலமும் சித்திக்க வேண்டும் என்று மனதார
கோரிக்கை வைத்தோம்.
அருகிலேயே மானசரோவர் ஏரி என்பதால் அங்கிருந்து
பல கடற்பறவைகள் பறந்து வந்தன அவற்றுக்கும் அன்னம் பாலித்தோம். அந்த இடத்தில் தற்போது
பல கட்டிடங்கள் கட்டிக்கொண்டு இருக்கின்றனர். வரும் காலத்தில் யாத்ரிகள் இங்கேயே
தங்கி ஐயனை திவ்யமாக தரிசனம் செய்ய இயலும். சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்து சிவ சக்தியை
தியானம் செய்து விட்டு புனித மானசரோவர்
ஏரியின் வலத்தை பேருந்து மூலமாவே துவக்கினோம்.
(தரிசனத்திற்கு காத்திருக்கும் திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கும் மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் தரிசனம் சித்திக்க அவர்களின் திருப்பாதங்களில் வீழ்ந்து வேண்டிக்கொள்கிறேன்.)
*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்
திருக்கயிலாயம்
பாடல் எண் : 2
புரிகொள்சடைய ரடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.
தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.
பொருள் : பெரிய யானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள்மிக்க கயிலைமலையில்
விடம் உண்ட கரியகண்டராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும் இறைவர் வளைத்துக்கட்டிய
சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர். கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமையம்மையை பலருக்கும் தெரியுமாறு ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்ததேவர் தலைவராவார்.
தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க http://thevaaram.org/
யாத்திரை தொடரும்....................
No comments:
Post a Comment