ஐயனின் முதல் தரிசனம்
புலையனேனையும் பொருள் என நினைந்து உன்
அருள் புரிந்தனை; புரிதலும் களித்துத்
தலையினால் நடந்தேன்; விடைப்பாகா!
சங்கரா!......... என்று ஆனந்தத்தால் கூத்தாடினோம்.
எதற்காக இவ்வளவு சிரமங்கள் எடுத்துக்கொண்டு இந்த மலங்காட்டில் பயணம் செய்து வந்த அடியோங்களுக்கு சிவசக்தி அளித்த அற்புத தரிசனம்.
மலையரையன் பொற்பாவையும் திருக்கயிலை நாதரும் நவரத்தினங்கள் ஒளிரும் சீரிய ஆனிப் பொன் சிங்காதனத்தில் அமர்ந்து நந்தி தேவர் தம் மூச்சுக்காற்றால் அம்மையப்பரை குளிர்வித்துக் கொண்டிருக்கும் அற்புத தரிசனம்.
அறுக்கிலேனுடல் துணிபட தீப்புக்கு
ஆர்கிலேன்; திருவருள் வகை அறியேன்;
பொறுக்கிலேன் உடல்; போக்கு இடம் காணேன்
போற்றி! போற்றி! என் போர் விடைப்பாகா!
இறக்கிலேன் உனைப் பிரிந்து இனிது இருக்க
என் செய்கேன்? இது செய்க என்று அருளாய் ..... என்று வணங்கினோம்
இந்த 2014 வருடத்தின் யாத்திரையின் முதல் தரிசனம் மிகவும் அற்புதமாக அமைந்தது. ஐயனும் முழு தெற்கு முகமும், கிழக்கு முகமும் இணைந்த அற்புதமான தரிசனம் கிட்டியது. கண்டேன் அவர் தரிசனம் கண்டறியாதன கண்டோம் என்று ஆனந்தித்தோம். "கண்ணார் அமுதனே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி " என்று அடி விழுந்து வணங்கினோம். மலைத்தொடர்களின் நடு நாயகமாக ஓங்கி உயர்ந்து ஐயன் இருக்கும் அமைப்பை கண்டு பதிகம் பாடி வணங்கினோம். அந்த ஆனந்த பரசவத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, நேரில் அனுபவித்தால்தான் புரியும்.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பினை மலர் கயினர் ஒரு பால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒரு பால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒரு பால்...
என்ற மணி வாசகபபெருமான் கூற்றுப்படி ஐயனை பல்வேறு வழிகளில் திருமுறைகள் பாடி வழிபடும் அன்பர்கள்.
கண்டேன் அவர் தரிசனம்
கண்டறியாதன கண்டேன்
காவாய்கனகத்திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
நிர்வாக அலுவலகம் மற்றும் வண்டிகள் நிறுத்தும் இடம்
டோக்சென் என்ற இந்த இடத்தில் 2012ல் அடியேன் யாத்திரை செய்த போது கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. தற்போது முடிவடைந்து கண்ணாடிகளுடன் எழிலாக நிற்கின்றது. இது தற்போது திருக்கயிலாய- மானசரோவர் யாத்திரிகளுக்கு ஒரு வாயிலாக விளங்குகின்றது. இது வரை அடியோங்கள் பயணம் செய்த பேருந்தை இங்கேயே நிறுத்தி விடவேண்டி வந்தது. இதற்கப்புறம் இனி சீன அரசின் சொகுசு பேருந்தில்தான் பயணம் செய்ய வேண்டும். சீன அரசு அவர்களுக்குத் தெரியாமல் யாரும் செல்லமுடியாதவாறு செய்து விட்டது. இராணுவ கெடுபிடிகளும் அதிகமாகி விட்டது. மானசரோவர் எரி வலத்தை துவங்குவதற்கு முன்னர் நம்முடைய மூட்டை முடிச்சுகள் எல்லாம் விமான நிலையத்தில் நுண் கதிர் கொண்டு சோதணையிடப்படுவது போல இங்கும் சோதனணையிடப்படுகின்றது. முழுவதுமாக இப்பிரதேசத்தை தற்போது இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு வந்து விட்டனர்
இந்த கட்டடத்தின் உள்ளே யாத்திரிகள் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொள்ள வசதிகள் உள்ளன. மற்றும் ஒரு அருங்காட்சியகம் போல திருக்கயிலாயம் பற்றிய பல தகவல்களை நாம் அறியலாம். ஐயனை முழுமையாக ஆனந்தமாக தரிசனம் செய்து ஆரத்தி காட்டி பின்னர் திபெத்திய பேருந்தில் ஏறி அமர்ந்து மானசரோவர் ஏறி வலத்தைத் தொடங்கினோம்.
மானசரோவர் கரையில் கட்டிடம்
கட்டிடத்தில் உள்பக்கம்
வழியெங்கும் மானசரோவர், இராக்ஷஸ்தால் மற்றும் திருக்கயிலாய மலையின் மைப்பு மற்றும் வெளி கிரி வலம் மற்றும் உள் கிரி வலத்தின் பாதை ஆகியவற்றை குறிக்கும் வரைபடங்கள் அமைத்துள்ளனர். அதில் அவசர உதவிக்கு அழைக்கவேண்டிய எண்ணையும் குறித்துள்ளனர். இராணுவ வண்டிகளும், மருத்துவ ஆம்புலன்ஸ்களும் மானசரோவர் ஏரிவலப்பாதை மற்றும் திருக்கயிலாய கிரிவலப்பாதையில் ரோந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கான கட்டணம் வசூலிக்கின்றனர்.
சீன சொகுசு பேருந்துகள்
ஐயனின் முதல் தரிசனம் மிகவும் அருமையாக அமைந்தது. இனி மானசரோவர் புனித நீராட்டம் எவ்வாறு இருந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாமா? அன்பர்களே.
3 comments:
அன்புள்ள நண்பருக்கு,
தீரா விணை = தீரா வினை என்று மாற்றினால் நன்றாக இருக்குமே.
மாற்றி விட்டேன் மிக்க நன்றி கந்தசாமி ஐயா.
மிக்க மகிழ்ச்சி.
Post a Comment