Thursday, October 31, 2019

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் -4


பெங்களூரில் இருந்து விமானம் மூலமாக காத்மாண்டு அடைந்து பசுபதிநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள விடுதியை அடைந்து அங்கு தங்கினோம்மறு நாள் காலை எழுந்து சூரிய ஒளியில் மின்னும் பசுபதிநாதரின் விமான  கலசத்தை தரிசனம் செய்து நாளைத் துவக்கினோம்யாத்திரையில் உடன் வரப்போகின்ற மற்றவர்களை அறிமுகம் செய்து கொண்டோம்காலை உணவை முடித்துக் கொண்டு முதலில் பசுபதி நாதரை தரிசனம் செய்தோம்அடுத்து அம்பாளை குஹ்யேஸ்வரி ஆலயத்தில் தரிசித்தோம்எப்போதும் போல் இன்றும் பல திருமணங்கள் அம்மன் ஆலயத்தில் நடைபெற்றன.  அடுத்து பள்ளி கொண்ட நாராயணர் ஆலயம் சென்றோம்அன்று இவர்களுக்கு புனிதமான நாளாக இருக்க வேண்டும் ஆலயத்தில் பல் வேறு இடங்களில் உபநயனங்கள் நடந்து கொண்டிருந்தனஅடுத்து சுயம்புநாத் ஸ்தூபி தரிசித்தோம்சென்ற தடவை சென்ற போது புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த சன்னதிகள் திருப்பணி முடிந்து  எழிலாக காட்சி தந்தது.  தங்கும் விடுதிக்கு திரும்பி வந்து மதிய உணவை முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.


காத்மாண்டுவில் தங்கிய விடுதி

ஸ்வயம்புநாத்திற்கு பயணம்

காத்மாண்டு நகரில் மக்கள் தொகை மிகவும் அதிகமாகி விட்டது. எனவே போக்குவரத்தும் அதிகமாகிவிட்டது. எங்கும் தூசு, பலர் முககவசம் அணிந்து கொண்டிருக்கின்றனர். வளர்ந்த நாடுகளைப் போல இங்கு பாதசாரிகளுக்கு மரியாதை அளித்து வண்டிகள் வழி விடுகின்றன என்பதை இத்தடவை கவனித்தோம். நம் நாட்டில் மட்டுமே வண்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பாதசாரிகளைப் பற்றி கவலைப் படுவதில்லை.  

ஸ்வயம்புநாத் ஸ்தூபி


 ஸ்வயம்புநாத்  மஹா சைத்ய ( பெரும் ஸ்தூபி)
ஸ்வயம்புநாத் அமைதிக்குளம்


ஸ்வயம்புநாத்திலிருந்து காத்மாண்டு நகரம்


வஜ்ராயுதம்

மதிய உணவு


பௌத்நாத் நுழைவு வாயில்

பௌத்நாத் ஸ்தூபி


பிரார்த்தனை உருளைகள்

காண்டா மணிகள்


பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பவர்கள்

பௌத்நாத் ஸ்தூபி பறவைப் பார்வையில்


பௌத்நாத்தில் மலர் அலங்காரம்


மாலை பௌத்நாத் ஸ்தூபியை தரிசிக்க சென்றோம். அருகில் இந்த ஸ்தூபியை அமைக்க மண் எடுத்த இடத்தை ஒரு புனித குளமாக மாற்றியிருந்தனர். தற்போது இக்குளம் கியோலிசாங் அமைதி பூங்கா (Ghyoilisang Peace Park)  என்றழைக்கப்படுகின்றது. 2016ல் சீன அரசின் உதவியுடன் இப்பூங்கா சீரமைக்கப்பட்டது. தற்போது புது வர்ணத்தில் எழிலாக காட்சி அளிக்கின்றது. ஒரு பகுதியில் பல வகையான புத்த  ஸ்தூபிகளின் மாதிரிகள் அமைத்துள்ளனர். அதன் மையத்தில் குரு ரிங்போசேவின் பிரம்மாண்ட  சுதை சிற்பமும் மற்றும் புத்தரின் வாழ்க்கையை சித்தரிக்கும் பல்வேறு எழிலார்ந்த சுதை சிற்பங்களும் சிறு கோட்டங்களில் புத்தர்களின் பல்வேறு தெய்வங்களின் சிறு உற்சவ மூர்த்திகள் அமைத்திருக்கின்றனர்  அவற்றை கண்டு களித்தோம். பள்ளி மாணவர்கள் பலர் அமர்ந்து  ஸ்லோகங்கள் கூறிக்கொண்டிருந்தனர்.   


குரு ரிங்போசே (Guru Ringpoche)


அவர் கரத்தில் உள்ள வஜ்ராயுதம்

ஸ்தூபிகளின் பல்வேறு வகைகளில் ஒன்றுநாம் நெய் விளக்கு ஏற்றுகின்றோம், இவர்கள் வெண்ணெய் விளக்கு ஏற்றுகின்றார்கள்.

ஸ்லோகங்கள் கூறும் பள்ளி மாணவர்கள்


பாக்மதி ஆரத்தியை தரிசிக்கும் அடியேன்


விடுதிக்கு திரும்பி வந்து பசுபதி நாதர் ஆலயம் சென்று மாலை ஆரத்தி தரிசனம் செய்தோம் முதலில் வாசுகி நாகத்திற்கு ஆரத்தி நடைபெறுகிறது, அப்போது சன்னதி மூடப்பட்டிருக்கிறது, கருவறையை சுத்தம் செய்து ஐயனுக்கு நைவேத்யம்  படைக்கின்றனர். பக்தர்கள் வரிசையில் வெளியே காத்திருக்கின்றனர். ஆரத்தி ஆரம்பம் ஆகும் பொது திருக்கதவங்களை திறந்து பக்தர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர். ஆரத்தியின் போது கருவறையின் உள்ளே நான்கு மூலைகளிலும் அலங்கார தீபங்கள் ஒளிர்கின்றன. மணிகள் ஒலிக்க, வேத கோஷங்கள் முழங்க , பக்தர்கள் திருவைந்தெழுத்தை ஓத ஐயனுக்கு அருமையாக ஆரத்தி நடைபெறுகின்றது. முதலில் குங்குலியம்,  பின்பு ஐந்து மூக தீப ஆரத்தி நடைபெறுகின்றது. சுற்றி சுற்றி வந்து நான்கு முகங்களுக்கும் ஆரத்தி காட்டுகின்றனர். வரிசையில் நின்றால் நான்கு முகத்தின் தரிசனத்தையும் பெற முடிகின்றது. ஆரத்தி முடிந்தவுடன் நடை சார்த்தப்படுகின்றது. அதற்குபின் ஆற்றங்கரையில்  பாக்மதி ஆற்றுக்கு ஆரத்தி நடைபெறுகின்றது. முதலில் சங்கநாதம். பிறகு கணேசரை போற்றி, தாய்நாடான நேபாளத்தைப் போற்றி பாடல்கள் பாடினர். ஒரு பெண் பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடினார். பின்னர் தூபம், நாக தீபம், அலங்கார தீபம் என்று வெகு விஸ்தாரமாக மூன்று அர்ச்சகர்கள் ஆரத்தி காட்டுகின்றனர். ஹரித்வாரில் கங்கை அன்னைக்கு நடப்பது போலவே இங்கும் நடைபெற்றது


பாக்மதி ஆரத்திஇரவு சுற்றுலா நிறுவனத்தினருடன் நடந்த கூட்டத்தில் திருக்கயிலாய தரிசனத்திற்கான அனுமதி இன்றுதான் கிடைத்ததது, எனவே  சீனாவிற்குள் நுழைவதற்கான விசா நான்கு நாள் கழித்துத்தான் கிட்டும். எனவே அனைவரும் மூன்று நாட்களுக்காவது காத்மாண்டுவில்தான் தங்க வேண்டும். எனவே முக்திநாத் மற்றும்  ஜனக்பூர் செல்பவர்களுக்கு  கட்டணத்தில் வண்டி ஏற்பாடு செய்து தருகிறோம், காத்மாண்டில் தங்குபவர்கள் அவர்கள் விருப்பப்படி வேண்டும் இடங்களுக்கு சென்று வரலாம் என்றார்கள். மேலும் தற்போது தங்கியுள்ள விடுதியிலிருந்து மாறி வேறு விடுதிக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார்கள். இவ்வாறு ஒரு தடங்கல் முதலிலேயே ஏற்பட்டது. இவ்வாறு இவ்வருட திருக்கயிலாய  யாத்திரையின் முதல் நாள் தரிசன நாளாகவும் ஏமாற்ற நாளாகவும் அமைந்தது.  பின்னர் விசா கிடைத்ததா,  எப்போது காத்மாண்டுவில் இருந்து கிளம்பினோம் யாத்திரை  முழுமையானதா?  என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.


திருக்கயிலை யாத்திரை தொடரும் . . . . 

No comments: