Sunday, December 15, 2019

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 9

பக்தபூர் சதுக்கம்

டோலேஸ்வரர் தரிசனத்திற்குப் பின் பக்தபூர் நகர சதுக்கத்தை பார்வையிட சென்றோம். முன்னர் வந்த போது படான் அரண்மனை சதுக்கத்தை சுற்றிப் பார்த்தோம் என்பதால் இத்தடவை பக்தபூருக்கு வந்தோம், விசா சமயத்தில் கிடைக்காததால் இவ்வாய்ப்புக் கிட்டியது.   காத்மாண்டு பள்ளத்தாக்கில் மூன்று நகர சதுக்கங்கள் உள்ளன. அவையாவன. காத்மாண்டு, பக்தபூர் மற்றும் லலித்பூர் ஆகும்.  காத்மாண்டு நகரத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் பக்தபூர் அமைந்துள்ளது.   யுனெஸ்கோ இச்சதுக்கத்தை உலக பாரம்பரிய தலமாக (World Heritage site) அறிவித்துள்ளது. மல்ல அரசர்கள் இந்நகரை முதலில் நிறுவினர். பின்னர் கூர்க்கா அரசர் பிரிதிவி நாராயண் ஷா போரில் மற்றவர்களை வென்று முழு காத்மாண்டு சமவெளியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். 14 -16  நூற்றாண்டுகளில் காத்மாண்டுவிற்கு முன்னர் பக்தபூர் நேபாளத்தின் தலைநகரமாக இருந்துள்ளது. இந்நகரத்தில் பக்தபூர் அரண்மனை, தௌமதி சதுக்கம், தத்தாத்திரேயர் சதுக்கம், மண்பாண்ட சதுக்கம் என நான்கு சதுக்கங்கள் உள்ளன.  படான் சதுக்கத்தைப் போலவே இச்சதுக்கத்திலும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கின்றனர். நேபாள நாணயங்களை மட்டுமே செலுத்த வேண்டும். நேவாரி கலாச்சாரத்தை இந்நகரில் நாம் முழுமையாகக்  காண முடிகிறது.







பக்தபூர் வரைபடம்


பக்தபூர் நகராட்சி கட்டிடம்





படிக்கிணறு

உக்ர சண்டி

உக்ர பைரவர்

சிம்மம்





திருக்கேதாரம்


பூரி ஜெகந்நாதம்



அரண்மனை சதுக்கத்தின் முக்கிய கட்டிடம் 55 சாளர அரண்மனை ஆகும். 1427ல் புபேந்திர மல்லன் என்ற அரசன் இவ்வரண்மனையை கட்ட ஆரம்பித்தார் பின்னர் அவரது மகனான ரஞ்சித் மல்லன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. முழுவதும் செங்கல்லால் கட்டப்பட்ட அரண்மனையில் மர சாளரங்களில் உள்ள நுண்ணிய வேலைப்பாடு மிகவும் அற்புதம். அரண்மனையின் தங்கத்துவாரமும் அருமையான கலை அம்சம் கொண்டது. அரண்மனைக்கு எதிரே ஒரு கம்பத்தில் மேல் கரங்கள் குவித்த நிலையில் உள்ள  பூபேந்திர மல்ல அரசரின் சிலை  அமைந்துள்ளது. அடியோங்கள் சென்ற சமயம் அரண்மனைக்குள் அனுமதிக்கவில்லை பின்னர் வந்து தரிசித்துக்கொள்ளலாம் என்று மற்ற இடங்களை தரிசிக்கச்சென்றோம்.




துவாரகை

கலை அருங்காட்சியகம்
(2015  நிலநடுக்கத்தில் சேதமடைநதால் முட்டுக் கொடுத்திருக்கிறார்கள்)



தர்பார் சதுக்கத்தின் நுழைவாயிலில் ஒரு தண்ணீர் தொட்டி உள்ளது. அடுத்து 18  கரங்களுடன் கூடிய உக்ர சண்டி மற்றும் உக்ர பைரவர் சிலைகளை கண்டு களிக்கலாம். அதற்கடுத்துள்ள கட்டிடத்தின் வாயிலை இரண்டு பிரம்மாண்டமான சிம்மங்கள் காவல் காக்கின்றன எனவே இது சிம்மத்துவாரம் என்றும் அழைக்கப்படுகின்றது. தற்போது இக்கட்டிடம் ஒரு தேசிய அருங்காட்சியகமாக (National Mueseum) உள்ளது. இச்சதுக்கத்தில் பாரத தேசத்தின் நான்கு தலங்களான (சார் தாம்) பத்ரிநாத், துவாரகை, பூரி (கோபிநாத்), இராமேஸ்வரம் ஆகியவற்றைக் குறிக்கும் ஆலயங்கள் அமைந்துள்ளன. காத்மாண்டுவில் உள்ளது போல பசுபதிநாதரின் ஆலயமும் அமைந்துள்ளது, ஒரு அரசனின் கனவில் வந்து இறைவன் ஆணையிட்டதால் இவ்வாலயம் கட்டப்பட்டதாக ஐதீகம்.  இக்கோவிலை சிறிய பசுபதி நாதர் ஆலயம் என்றழைக்கின்றனர். வத்சலா தேவி ஆலயம் என்றழைக்கபப்டும் துர்க்கையின் ஆலயமும் அருகே அமைந்துள்ளது. 2015ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல் வேறு ஆலங்கள் சேதமடைந்தன அவற்றுள் இவ்வாலயமும் ஒன்று, எனவே பழைய ஆலயத்தை முழுவதுமாக இடித்துவிட்டு தற்போது புது ஆலயம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  

Monday, December 02, 2019

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 8

டோலேஸ்வரம் தரிசனம்

ஆலயம் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டுள்ளது

காத்மாண்டுவில் தங்கிய நான்காம் நாள் டோலேஸ்வரம் மற்றும் படான் அரண்மனை சதுக்கம் செல்ல திட்டமிட்டிருந்தோம். அதன் பிரகாரம் காத்மாண்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டோலேஸ்வர் சிவாலயத்திற்கு முதலில் பயணித்தோம். காத்மாண்டி நகருக்கு வெளியே ஒரு கிராமம் போல இருந்தது. ஆலயத்திற்கு வரவேற்பு வளைவு கட்டுவதற்கான அஸ்திவாரப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. கூட்டம் இருக்கவில்லை.  இவ்வலயத்திற்கு கேதார்நாத்துடன் தொடர்பு  உள்ளது என்பது இவர்கள் நம்பிக்கை. பீமனிடமிருந்து தப்பிக்க சிவபெருமான் காளை ரூபத்தில் பூமிக்குள் புகுந்த போது அவரின் உடல் பகுதிகள் இந்தியாவில் ஐந்து தலங்களில் வெளியே வந்தன அவை பஞ்சகேதாரங்கள் என்றழைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. அப்போது ஐயனின் திருமுகம் வெளிப்பட்ட இடம் நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் ஆலயம் என்றே இதுவரை படித்திருக்கின்றேன். இவ்வாலயத்திற்கு வந்த போது திருமுகம் வெளிப்பட்ட தலம் பசுபதிநாத் அல்ல பக்தபூரில் அமைந்துள்ள  இவ்வாலயம் என்பது இவர்கள் நம்பிக்கை.



டோலேஸ்வரர்

பெரிய கல் நந்தி


திரிசூலம், கமண்டலம், வாசுகி நாகம்


உடுக்கை, சிமிட்டி

அதற்கு சான்றாக இவர்கள் கூறுவது ஐயனின் திருமேனி, மற்ற கேதாரங்களில் உள்ளது போலவே இத்தலத்தில் ஐயன் மலையின் கொடுமுடியாக அருள் பாலிக்கின்றார். மேலும் துங்கநாத்தில் எவ்வாறு சாய்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றாரோ அதே போல இடது பக்கம் ஒய்யாரமாக  சாய்ந்த கோலத்தில்  இத்தால்த்தில் அருள் பாலிக்கின்றார். தற்போது பழைய எளிமையாக இருந்த பழைய  ஆலய கட்டிடத்தை இடித்து விட்டு,  நேவாரி பாணியில் இரண்டு பகோடா அமைப்பில்  புதிய ஆலயம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.  மிகவும் அமைதியாக உள்ளது ஆலயம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்து ஐயனை தரிசித்துக்கொண்டிருக்கலாம். பசுபதிநாதர் ஆலயம் போலவே கருவறைக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை மற்றும் உள் பிரகாரத்தில் சுற்றி வந்து ஐயனை நான்கு திசைகளில் இருந்தும் தரிச்சிக்கலாம்.






பசுபதி நாதர்




ஆலயத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி






கிராம சந்தை

வெளிப் பிரகாரத்தில் பெரிய உலோக நந்தியும், சிறு கல் நந்தியும் ஐயனை நோக்கியவாறு அருள் பாலிக்கின்றனர். மேலும் பிரம்மாண்ட திரிசூலம், உடுக்கை, வாசுகி நாகம், சிமிட்டி,  கமண்டலம்,  மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. அம்மன் சன்னதியும், ஹோமகுண்டமும் ஆலயத்திற்கு பின் புறம் அமைந்துள்ளன. அருகில் ஒரு ஆசிரமம் உள்ளது, அதில் நான்கு முக சிவலிங்க சன்னதி  மற்றும் இந்தியப்பாணியில் ஒரு சிறு சன்னதியில் ஹனுமன், துர்க்கை, கட்டு சியாம்ஜி அருள் பாலிக்கின்றனர். சற்று நேரம் அமர்ந்து அருகில் உள்ள பதான் அரண்மனை சதுக்கத்தை தரிசிக்க சென்றோம்.

                                                                                                                                  யாத்திரைத் தொடரும் . . . . .