Thursday, April 09, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 21

                                             இரண்டாம்  நாள் கிரி வலம்  - 2

கௌரி குளத்தின் அழகு 

டோல்மாவில் அன்னை பார்வதியை தரிசனம் செய்து விட்டு  கீழிறங்கினால் வலது பக்கம் அன்னை நீராடும் கௌரி குளத்தை தரிசனம் செய்கின்றோம். மேலிருந்து கௌரி குளத்தின் அழகை இரசிக்கின்றீர்கள் அன்பர்களே.   
டோல்மாவில் இருந்து லாம் சூ பள்ளதாக்கிற்கு இறங்கும் பாதை மிகவும் செங்குத்தானது. மேலும் பாறைகள் நிறைந்தது பார்த்துப்பார்த்து மெதுவாகத்தான் இறங்க வேண்டும் இவ்விடம் கைத்தடி மிகவும் அவசியம். சென்ற யாத்திரையின் போது பாதை முழுவதும் வழுக்கும் உறைபனி இருந்ததால் மிகவும் சிரமத்துடன்தான் இறங்கினோம். இந்த யாத்திரையின் போது பாதையில் பனியில்லாததால்    அவ்வளவு சிரமம் இருக்கவில்லை. 
  
டோல்மாவில் இருந்து இறக்கம் 


டோல்மாவில் இருந்து குதிரையில் இறங்குவது பாதுகாப்பானதல்ல என்பதால் யாத்திரிகளை இறங்கச்சொல்லி விட்டு அவர்கள் குதிரையை புல் மேய விட்டுவிட்டு தாங்களும் உணவு உண்டு விட்டு பின்னர்  யாத்திரிகள் கீழே இறங்கி வந்த பின் அவர்களை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். 


லாம் சூ சமவெளியில்  நடை பயணம் குதிரைக்காரர்கள் இந்தத் தடவை  மிகவும் முன்னேறி விட்டனர். ஹிந்தியில் பேசுகின்றனர் நாம் சொல்வதை புரிந்து கொள்கின்றனர். செல்போன் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டும், பாட்டு கேட்டுக்கொண்டும் வருகின்றனர். வழியில் செல்பவர்களுக்கும் உதவ முன் வருகின்றனர்.   ஒரு  திபெத்தியப்பெண் எதோ உதவி கேட்க அடியேனிடம் தலைவலி மாத்திரை உள்ளாதா ?என்று கேட்டு வாங்கி அந்த பெண்ணுக்கு கொடுத்து உதவினார். 


பறவைப்பார்வையில் சமவெளி

குமாரசுவாமி ஐயா போர்ட்டர்களுடன் 

      
 நந்தியெம்பெருமான் தரிசனம் 

லாம் சூ சமவெளியில் இறங்கிய பின் பாதை சமதளம்தான் அதிக ஏற்ற இறக்கங்கள் கிடையாது. இரு பக்கமும் நெடிதுயர்ந்த மலைகள் ஆற்றை ஒட்டிய பாதை சில இடங்களில் பனியிலும் நடக்க வேண்டி வரலாம். ஆனால் பாதைதான் சுமார் 8 கி.மீ  தூரம். அதுவும் டோல்மா ஏறி இறங்கியபின் இந்த தூரம் அனுமார் வால் போல நீண்டு கொண்டே செல்வது போல தோன்றுகின்றது.   ஆனால் மிகவும் கடினமான டோல்மா ஏற்றத்தை கடந்து வந்து விட்டதால் இது அவ்வளவு சிரமமானதாக தோன்றாது.  இப்பகுதியில் நமக்கு திருக்கயிலாயத்தின் தரிசனம் கிட்டுவதில்லை ஆனால் நந்தியெம்பெருமானின் பக்கவாட்டு தரிசனம் கிட்டுகின்றது.   

வழியில் சூரிய மின்சார தகடுகள் மற்றும் செல்போன் ஆன்டனாக்கள்

ஒரு அருவியின் தடம் 

                                                ஜுடுல்புக் முகாம் 


பான்போக்களின் குருவுடன் மில்ரெபா போட்டியிட்ட போது மில்ரெபா   திருக்கயிலாயத்தை வலம் வந்தார், நாரோ இடம் வந்தார் இருவரும் இங்கு சந்தித்துக்கொண்டனர். பெரு மழை பெய்தது அப்போது மில்ரெபா ஒரு பெரிய பாறையை உயர்த்தி குடையாக பிடித்தார். இவ்வாறு மில்ரெபா அதிசயம் நிகழ்த்திய  இடம் என்பதால் அதிசய குகை என்றழைக்கப்படுகின்றது. எழுவரும் எந்தவித சிரமமும் இல்லாமல் ஜுடுல்புக் முகாமை அடைந்தோம். இன்னொரு குழுவினருடன் உணவு, அறை ஆகியவற்றை பகிர்ந்து கொண்டோம். மிகவும் அவசியமான ஓய்வெடுத்தோம்.  இவ்வாறாக இரண்டாவது நாள் கிரி வலம் சிவசக்தியின் அருளால் சுபமாக அமைந்தது. 

கல்லாத புலறிவில் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் ஆய்வந்து வனப்புஎய்தி இருக்கும் வண்ணம் 
பல்லோரும் காணஎன்தன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே (கயிலை மலையில்) கண்டேனே! 

                                                                                                                                                         யாத்திரை தொடரும் . . . . . . 


2 comments:

பழனி. கந்தசாமி said...

பூர்வ புண்ணியம் இருந்தால் தவிர இத்தகைய யாத்திரைகள் கைகூடுவது இயலாது. உங்களுக்கு என் நமஸ்காரங்கள்.

Muruganandam Subramanian said...

ஐயா, தங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசியினாலும், அந்த சிவசக்த்ஜியும் மாப்பெருங்கருணையினாலுமே இது சாத்தியம் ஐயா.

மிக்க நன்றி ஐயா.