ஃபேவா ஏரி
போக்ராவின் சிறப்பே அதன் ஏரிதான். இந்த ஏரியில் படகுப்பயணம் செய்யாவிட்டால் போக்ரா சென்றதே வீண் என்று சொல்லலாம். “ஃபேவா ஏரி” (Phewa Lake) என்று அழைக்கப்படும் இந்த அழகான ஏரி நேபாள் நாட்டின் இரண்டாவது பெரிய ஏரி ஆகும். சுற்றிலும் நெடிதுயர்ந்த பனி மூடிய மலைச்சிகரங்கள் அதன் அடிவாரத்தில் பச்சை நிரத்தில் மிகவும் விலாசனமான ஏரி. அருமையான சூழலில் அமைந்துள்ளது பேவா ஏரி.
பேவா ஏரியில் படகுகள்
பனி மூடிய அன்னபூர்ணா மலைச் சிகரங்களின் அழகை இந்த ஏரியின் நீர் அருமையாக பிரதிபலிக்கின்றது, கரையில் போடப்பட்டுள்ள பெஞ்சுகளில் அமர்ந் து அந்த அழகை இரசிப்பதே ஒரு அருமையான அனுபவம். போக்ராவில் காத்மாண்டுவைப் போல கூட்டம் அதிகம் இல்லை, சப்தம் இல்லை கிராம சூழலே விளங்குகின்றது. எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அமைதியாக தங்க ஏற்ற இடம். ஏரியை சுற்றிலும் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. கரையில் ஆல மரங்களும் அரச மரங்களும் உள்ளன அதன் அடியில் கற்பெஞ்சுகள் இடப்பட்டுள்ளது, அதில் அமர்ந்து ஏரியின் அழகை அமைதியாக இரசிக்கலாம். படகுப்பயணம் செய்யலாம். சைக்கிளில் அல்லது நடந்து ஏரியை வலம் வரலாம்.
கூரையில் மீன் கொத்திப் பறவைகள்
ஏரியின் நடுவில் லேக் வராஹி ஆலயம் அமைந்துள்ளது. ஐரோப்பியர்கள் அதிகம் வருவதால், கண்காணிப்பு கோபுரம், அதி வேக மீட்புப் படகுகள், படகில் பயணம் செய்யும் அனைவரும் பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும் எல்லா வகையான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. நேரம் குறைவாக இருந்ததால் அடியோங்கள் லேக் வாராஹி ஆலயம் படகில் சுற்றி வந்து வணங்கி விட்டு தங்கும் விடுதிக்கு திரும்பி வந்தோம். வரும் வழியில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது, சூரியன் மறையும் அழகையும் இரசித்தோம்.
அந்தி சாயும் வேளையில் ஏரியின் அழகு
இவ்வாறாக அரை நாளில் அவசரம் அவசரமாக போக்ராவின் சுற்றுலாவை முடித்தோம்.
No comments:
Post a Comment